பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தியதாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களுக்கான விடுதி செயல்பட்டு வந்தது. இதனை, குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சம்பத்ராஜ் என்ற சஞ்சீவி (48) நடத்தி வந்தார். வேலை மற்றும் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் என மொத்தம் 6 பெண்கள் தங்கி வந்தனர்.
இந்நிலையில், விடுதியில் தங்கி இருந்த கல்லூரி அதிகாரியாக பணியாற்றும் காரைக்காலை சேரந்த பெண், குளியல் அரையில் உள்ள மின்சார பிளக்கில் ஹேர் ட்ரையரின் வையரை சொருகியுள்ளார். அப்போது தான், அதனுள் சிறிய கேமரா இருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண், இதுகுறித்து உடனடியாக தனது உறவினர்களிடம் தெரிவித்தார்.
மேலும், தனது செல்போனில் உள்ள செயலி மூலம், விடுதியில் வேறு எங்கெல்லாம் கேமராக்கள் இருக்கிறது என்று கண்டறிய அப்பெண் சோதனை செய்தார். அப்போது, குளியல் அறை, 3 படுக்கை அறையில் உள்ள எல்இடி பல்புகளிலும், துணி மாட்டும் ஹேங்கர் உள்பட சுமார் 9 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பெண் ஆதம்பாக்கம் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். விடுதிக்கு விரைந்த போலீசார் 9 ரகசிய கேமராக்களையும் கைப்பற்றினர்.
இதுகுறித்து சம்பத்ராஜூக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து அஸ்தினாபுரத்தில் இருந்து தப்பியோடினார். போலீசார் விரட்டிப் பிடிக்க முயன்றபோது சம்பத் ராஜ் கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இதனால், விரைந்து ஓட முடியாத சம்பத்ராஜை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சம்பத்ராஜை சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் சம்பத்ராஜ் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பத்ராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: திருச்சியை சேர்ந்த நான் பி.இ முடித்துவிட்டு சென்னை தேனாம்பேட்டையில் கட்டுமான நிறுவன தொழில் நடத்தினேன். உரிய முறையில் வீடுகள் கட்டித்தராததால் ஏற்கனவே தன் மீது மோசடி புகார்களும் உள்ளன. கடந்த 2012ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் என்னை கைது செய்தனர்.
இதன்பிறகு தான், ஆதம்பாக்கத்தில் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை மாதம் ரூ.24 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்தேன். மேலும், ஆதம்பாக்கத்தில் இருந்து அஸ்தினாபுரத்திற்கு குடியேறியதால், ஆதம்பாக்கத்தில் உள்ள வீட்டை பெண்களுக்கான தங்கும் விடுதியாக மாற்றினேன். ஆன்லைனில் விளம்பரம் செய்தேன். இதன்மூலம், 6 பெண்கள் மாதம் தலா ரூ.7 ஆயிரம் வாடகையில் தங்கினர். இதே விடுதியை, பகல் நேரத்தில் தனது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாகவும் பயன்படுத்தினேன்.
ஏற்கனவே, கட்டுமான நிறுவனம் நடத்தியபோது தனக்கு கீழ் பணிபுரிந்த 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன். அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளேன். இதேபோல், விடுதியில் உள்ள பெணகள் மீதும் தனக்கு ஆசை ஏற்பட்டது. அதற்காக திட்டமிட்டேன்.
குளியல் அறை, படுக்கை அறை, உடை மாற்றும் இடங்களில் ரகசிய கேமராக்களை பொருத்தி அதன் மூலம் அவர்கள் அரைகுறை ஆடைகளில் இருப்பதை படம்பிடித்து, அதை வைத்து மிரட்டி அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று திட்டமிட்டேன். ஆன்லைனில் வைபை மூலம் இயங்கக்கூடிய 9 நவீன ரக சிறிய கேமராக்களை வாங்கினேன். பொருத்தினேன். இந்த கேமராக்கள் ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டால் மட்டுமே இயங்கும். மற்ற நேரங்களில் இயங்காது. இதனால், இரவு நேரங்களில் பெண்களை செல்போன் மூலம் ரசிக்கலாம் என்று இருந்தேன். அதற்குள் ரகசிய கேமராக்கள் குறித்து தெரியவந்து, போலீசிடம் சிக்கிக் கொண்டேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் சம்பத்ராஜ் கூறியுள்ளார்.