நெல் ஜெயராமன் ஏற்படுத்திய விழிப்புணர்வு மகத்தானது! - வைகோ இரங்கல்

Vaikos Obituary Nel Jeyaraman Death

by Devi Priya, Dec 6, 2018, 13:30 PM IST

பாரம்பரிய விதை காப்பாளர் நெல் ஜெயராமன் மறைவுக்கு மதிமுக பொதுசெயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.


வைகோ வெளியிட்ட இரங்கல் அறிக்கை:

நெல் ஜெயராமன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். சங்க காலந்தொட்டுப் பல ஆயிரக்கணக்கான நெல் வகைகளை பயன்படுத்தி, உழவுத் தொழிலில் உலகம் வியக்க வாழ்ந்த தமிழகத்தில், அழிவின் விளிம்பில் இருந்த 174 நெல் விதைகளைக் கண்டு அறிந்து சேகரிப்பதற்காகத் தமிழகம் முழுமையும் சுற்றித் திரிந்த ஜெயராமன், இந்த உலகில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் அவர்களோடு இணைந்து பணியாற்றி, இந்த நூற்றாண்டு இளைய தலைமுறையினரிடம் அவர் ஏற்படுத்தி இருக்கின்ற இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு மகத்தானது. அதற்காகத் தமிழகம் அவருக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கின்றது.ஆண்டுதோறும் திருஅரங்கத்தில் கூடி, பங்கேற்க வருகின்ற ஒவ்வொரு விவசாயிக்கும் இரண்டு கிலோ நெல் விதைகளை இலவசமாக வழங்கி, அடுத்த ஆண்டு அதை நான்கு கிலோவாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அந்த விதைகளை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி, இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு தமிழகம் முழுமையும் பரவிட அவர் ஆற்றி இருக்கின்ற தொண்டு அளப்பரியது.

எனவேதான் நம்மாழ்வார் அவர்கள் ஜெயராமனின் பெயருக்கு முன்னால் ‘நெல்’ என்ற சொல்லைச் சேர்த்துச் சிறப்பித்தார். அதுவே அவருக்குப் பெருமை.

மரபு அணு மாற்று விதைகளுக்கு எதிரான போராட்டத்தில் தமிழகத்தில் மட்டும் அல்ல, கேரளம், ஆந்திரம், ஒடிசா, தெலங்கானா மாநில விவசாயிகளோடும் இணைந்து களப்பணி ஆற்றினார்.

எத்தனையோ விருதுகளை அவர் பெற்று இருந்தாலும், நானும் ஒரு விவசாயி என்கின்ற முறையில் அவரது பணிகளைப் பாராட்டக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

அவர் மருத்துவமனையில் இருந்தபோது, நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தேன். விரைவில் நலம் பெற்று வருவார் என எதிர்பார்த்தேன்.

அவரது மறைவு, தமிழக விவசாயத்திற்கு இழப்பு. அவரது உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Nel-jayaraman--Passed--away

 

You'r reading நெல் ஜெயராமன் ஏற்படுத்திய விழிப்புணர்வு மகத்தானது! - வைகோ இரங்கல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை