சிபிஐ விசாரணை வளையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்- பதவியில் நீடிப்பது முறையா? ராமதாஸ் கேள்வி

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியில் நீடிப்பது முறையா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

குட்கா ஊழல் வழக்கின் விசாரணைக்காக நேரில் முன்னிலையாகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தரகர் சரவணன் ஆகியோருக்கு மத்தியப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை அனுப்பியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தரகர் சரவணன் நாளையும், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றொரு நாளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய குட்கா ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பெயர் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி, இவ்வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரிகளும் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால், குட்கா ஊழலில் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் குவித்த பெரும்புள்ளிகள் தப்ப வைக்கப்படுவரோ என்ற ஐயம் எழுந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அவரது தரகருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது இந்த வழக்கில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை கையூட்டு வாங்கிக் கொண்டு விற்பனை செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் இளைஞர் சமுதாயத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கரும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் செய்த தீமையும், துரோகமும் மன்னிக்கப்படக் கூடாதவை. சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் மக்களின் நலவாழ்வை உறுதி செய்ய வேண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டவிரோதமாக குட்கா போதைப் பாக்குகளை விற்பனை செய்ய அனுமதித்ததன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களை போதைப் பாக்கு பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக சிதைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பாக்குகளை தடையின்றி விற்பனை செய்வதற்காக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு சில மாதங்களில் மட்டும் ரூ.40 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் தமிழக அரசுக்கு வருமானவரித்துறை அனுப்பி வைத்துள்ளது. இது நடந்து ஈராண்டு ஆன பிறகும் ஊழல் அமைச்சர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிலிருந்தே தமிழகத்தில் எவ்வளவு தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

சட்டவிரோத குட்கா விற்பனையை அனுமதிக்க கையூட்டு தரப்பட்டது தொடர்பான வருமானவரித்துறை அறிக்கையின் அடிப்படையில் 2016&ஆம் ஆண்டில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த அசோக்குமார் துணிச்சலாக நடவடிக்கை எடுக்க முயன்றார். ஆனால், அந்த ஒரே காரணத்திற்காக அவரை விருப்ப ஓய்வில் செல்லும்படி அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். குட்கா ஊழல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் ஜெயலலிதா தொடங்கி எடப்பாடி பழனிச்சாமி வரை அனைவரும் ஒரே மாதிரியான அணுகுமுறையைத் தான் கடைபிடிக்கின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் கையூட்டாக வாங்கிய பணம் அவருடன் மற்றும் நின்றுவிடவில்லை; அதிகாரப் படிக்கட்டுகளின் உச்சத்தில் இருந்தோர், இப்போது இருப்போர் வரை பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் இதற்கெல்லாம் காரணமாகும்.

குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. விஜயபாஸ்கருக்கு எதிராக வருமானவரித்துறை அறிக்கை அளித்தது மட்டுமின்றி, அவரது வீட்டில் வருமானவரித்துறையும், சிபி.ஐயும் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளன. இப்போது விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அழைப்பாணையும் அனுப்பியுள்ளது. இதற்குப் பிறகும் விஜயபாஸ்கர் பதவியில் தொடருவதும், தொடர அனுமதிப்பதும் முறை தானா? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதிகார மமதையில் உள்ள முதல்வருக்கு இது கேட்டிருக்க வாய்ப்பில்லை.

காமராஜரும், கக்கனும் வீற்றிருந்த அமைச்சர் நாற்காலியில் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் நீடிப்பது தமிழகத்திற்கே பெரும் அவமானம் ஆகும். அவரை தமிழக அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நீக்க வேண்டும். விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட குட்கா ஊழல் வழக்கை விரைவாக நடத்தி குற்றமிழைத்தோருக்கு சிபிஐ தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!