முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான பாசத்தை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர் நாடார் சமூக சொந்தங்கள். நம்மைப் பற்றி அவர்தான் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கடிதம் மூலம் தெரிவித்தார். மோடி நமக்கு எதிராகச் செயல்படுகிறார் என பேசி வருகிறார்களாம்.
பாராளுமன்றத் தேர்தலில் மோடி அதிகளவில் நம்பியிருப்பது நாடார் சமூக வாக்குகளையும் கொங்கு பெல்ட்டில் இருந்து வரக்கூடிய வாக்குகளையும் தான். சட்டமன்றத் தேர்தலிலேயே அதிக வாக்குகளை மோடிக்குக் கொடுத்தது கொங்கு பெல்ட்தான்.
மாநிலத் தலைவர், இஸ்ரோ தலைவர் பதவி எனப் பல உயர் பதவிகளை நாடார் சமூகத்துக்குக் கொடுத்த மத்திய அரசு, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் உள்ள அவதூறான வரிகளை நீக்க மறுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் பெரிய அளவில் போராட்டத்தையும் நடத்தினார்கள். இதைப் பற்றி நாடார் மக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார் கணேசன் நாடார்.
தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தின் நிர்வாகியாகவும் இருக்கிறார். அவர் தன்னுடைய முகநூல் பதிவில், ' மறைந்த தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதாவுக்கு நமது சமுதாயத்தின் சார்பில் அஞ்சலி செலுத்துவோம்' எனக் குறிப்பிட்டு, சி.பி.எஸ்.இ 9ம் வகுப்புப் பாட புத்தகத்தில், ஜானகி நாயர் என்ற பெண்மணி நம் சமூகத்தை இழிவுபடுத்தி எழுதி இருந்தார்.
இக்கருத்தை மறுத்து அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா 16.11.2012 ல் எழுதிய கடிதத்தை இதன்மூலம் நினைவு படுத்துகிறேன். அக்கடிதத்தில், " சேர,சோழ, பாண்டிய நாடுகளை ஆண்டு வந்த பரம்பரையின் வழித் தோன்றல்களே நாடார்கள் என்று அறியப்படுகிறது.
நிலைமைக்காரர் (நாடான்கள்) பின்பற்றி வரும் பாரம்பரியப் பழக்க வழக்கங்களையும், நாடார்கள் அதிகமாக வாழும் திருச்செந்தூர் மற்றும் பனை மரங்கள் சூழ்ந்த தேரிப் பகுதிகளிலும், பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய கொற்கையிலும் கிடைத்த புராதன சின்னங்களை பார்க்கும்போது நாடார்கள் முற்கால பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்று கருத இடமிருக்கிறது.
இடைக்காலத்தில் சேர, பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில், நிர்வாகிகளாகவும்,கணக்கர்களாகவும் இருந்துள்ளனர் என்பது நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கல்வெட்டுமூலம் தெரியவந்துள்ளது. அவர்கள் ஒரு கால கட்டத்தில் தென்னிந்தியாவின் ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இச்செய்திகள் 16.11.2012 தொலைகாட்சிகளிலும் 17.11.2012 தினசரி செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வாக்கு வங்கியை மனதில் வைத்து அரசியல் செய்து பிழைப்பு நடத்தி வரும் அரசியல்வாதிகளின் மத்தியில் ஓட்டு வங்கியைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் உண்மையை உலகுக்கு உரக்க உரைத்தார். மனதில்பட்ட உண்மையை எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஊரறியச் செய்து நமக்கு கவுரவத்தையும்,மரியாதையும் கிடைக்கச் செய்தார்.
இத்தகைய நேர்மையான பார்வையும்,தைரியமும், திராணியும் தமிழக அரசியல்வாதி யாருக்காவது உண்டா? மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மற்ற செயல்பாடுகளில் நம்மில் சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் ஆனால், இந்த ஒரு காரணத்துக்காக நாம் அவருக்கு நன்றியுடையவர்களாக இருப்போம்' எனக் கூறியிருக்கிறார்.
-அருள் திலீபன்