டெல்லி வாலாக்களிடம் மருமகன் சபரீசனை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ஸ்டாலின். இனி டெல்லிக்கு அவர்தான் என்பதாக இந்தக் காட்சிகள் அமைந்திருப்பதை வேண்டா வெறுப்பாகப் பார்க்கிறார் கனிமொழி.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளை வருகின்ற 16ம் தேதி திறந்து வைக்க இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக நேற்று சோனியாவையும் ராகுல் காந்தியையும் சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்தார் ஸ்டாலின். இந்த சந்திப்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா, கனிமொழி ஆகியோருடன் சபரீசனும் இருந்தார்.
புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்கும்போது நடுவில் நிற்க வைக்கப்பட்டார் அவர். முகம் முழுக்க புன்னகை தவழ காட்சி கொடுத்தார் மருமகன் சபரீசன்.
இந்த சந்திப்பு தொடர்பாக கட்சி நிர்வாகிகள் பேசத் தொடங்கியுள்ளனர். அவர்கள் பேசுகையில், ' சட்டசபை தேர்தலிலேயே ஸ்டாலின் ஜெயித்திருப்பார். தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பாகவே, ஸ்டானை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தியது சபரீசனின் மார்க்கெட்டிங் டீம்.
இதற்காக பல கோடி ரூபாய்கள் வாரியிறைக்கப்பட்டன. 2016 தேர்தல் நேரத்தில் ஃபேஸ்புக்கில் திமுகவுக்கு ஆதரவாக ஸ்டேட்டஸ் போட்டால் கூட 250 ரூபாய் பணம் என்ற செய்தி வைரலானது.
தேர்தலில் தோற்றதற்கு கருணாநிதி திடீரென இடையில் வந்து முதல்வர் பதவி பற்றிப் பேசியதுதான் என்ற பேச்சுக்களும் வந்தன.
இப்போதும் ஐ.டி விங்க் என்ற பெயரில் தனக்கென ஒரு கூட்டத்தைக் கூட்டி வைத்திருக்கிறார் சபரீசன்.
இந்தக் கூட்டத்தின் மூலம் எந்தெந்த தொகுதிகளுக்கு யார் வேட்பாளர் என்பதையும் முடிவு செய்துவிட்டார்களாம். அதாவது 40 தொகுதிகளுக்கும் பசையான வேட்பாளரை முடிவு செய்துவிட்டார் சபரி.
அவர்களிடம் முன்தொகைகளும் வாங்கப்பட்டுவிட்டன. இந்த 40 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்தது போக 25 தொகுதிகளில் திமுக நிற்க இருக்கிறது.
அப்போது மற்ற தொகுதிகளில் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்களாம். முன்னணி நிர்வாகிகளைக் கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளர்களை மருமகனே முடிவு செய்ததை கலக்கத்தோடு பார்க்கின்றனர் மூத்த பொறுப்பாளர்கள்.
கட்சியே மருமகனின் கண்ட்ரோலில் இருக்கும்போது, நாம் சொல்வதையா தளபதி கேட்கப் போகிறார் எனப் புகைச்சலில் இருக்கின்றனர். தேர்தல் நெருக்கத்தில் இந்த விவகாரம் பெரு வெடிப்பாக மாறலாம்' எனவும் அவர்கள் பேசி வருகின்றனர்.
-அருள் திலீபன்