குட்கா ஊழல் வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் கைது செய்யப்படக் கூடும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
தமிழகத்தில் 2013-ம் ஆண்டு மே மாதம் குட்கா போதைப் பாக்குகளை விற்பனை செய்ய தடை சட்டம் கொண்டு வந்தார் முதல்வராக இருந்த ஜெயலலிதா. ஆனாலும் தமிழகத்தில் குட்கா போதைப் பாக்குகள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இதற்காக பல கோடி ரூபாய் அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கை மாறியதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் 2016-ம் ஆண்டு குட்கா தயாரிப்பாளர் மாதவராவ் வீடு, செங்குன்றம் குட்கா குடோன் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.
இந்த சோதனையின் போது மாதவராவின் டைரி ஒன்றும் சிக்கியது. அதில்தான் யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்கிற விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து மாதவராவிடம் லஞ்சம் பெற்ற அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது.
வருமான வரித்துறையின் இக்கடிதம் ஊடகங்களில் வெளியானது. ஆனால் தமிழக அரசோ இப்படி ஒரு கடிதமே வரவில்லை என சாதித்தது. இதையடுத்து திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
வருமான வரித்துறையின் கடிதத்தை முன்வைத்து குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி இந்த வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் முதன்மை இயக்குனர் சுசி பாபு வர்கீஸ் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
அதில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சோதனை நடத்திய போது சசிகலாவின் அறையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சில மூத்த காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் காவல்துறை தலைவர் அசோக் குமார் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அமைச்சர் ஒருவருக்கு மாதந்தோறும் ரூ56 லட்சம் லஞ்சமாகக் கொடுத்ததை மாதராவ் விசாரணையில் ஒப்புக் கொண்டதாகவும் விசாரணையின் போது வருமான வரித்துறை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை தலைமை இயக்குனர் டி.கே. ராஜேந்திரன், பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, சென்னை மாநகர முன்னாள் ஆணையர் எஸ். ஜார்ஜ், விஜயபாஸ்கரிடம் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி, தற்போது தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய ஆய்வாளராக உள்ள சம்பத், மாம்பலத்தில் உள்ள காவல்துறை அதிகாரி மலர் மன்னன் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.
மொத்தம் ரூ40 கோடிக்கு குட்கா தயாரிப்பாளர் மாதவராவிடம் லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படும் இவ்வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனை சிபிஐ விசாரணைக்கு அழைத்தது. அவரிடம் 8 மணிநேரம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின் போது அமைச்சர் விஜயபாஸ்கருக்காக மாதவராவிடம் மாதந்தோறும் லஞ்சம் வாங்கிக் கொடுத்ததை சரவணன் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விரைவில் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
-எழில் பிரதீபன்