காதலித்து ஓடிப் போன 36 இளம்பெண்கள் - தருமபுரி கணக்கு சொன்ன பாமக நிர்வாகி

PMK Ex MP Senthil speaks on Love Marriages

by Mathivanan, Dec 13, 2018, 13:10 PM IST

நாயக்கன் கொட்டாய் கலவரத்துக்குப் பிறகு இளவரசன், திவ்யா காதல் விவகாரத்தை அரசியல் ஆயுதமாகக் கையாண்டார் ராமதாஸ். விளைவு, தருமபுரி தொகுதியின் எம்.பியானார் அன்புமணி ராமதாஸ்.

இதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வர நினைத்தார்கள். ஜெயலலிதாவின் அரசியல் சாதுர்யத்தால் அதுவும் அடிபட்டுப் போனது.

மாற்றத்துக்காக 100 கோடி ரூபாய் செலவானது மட்டுமே மிச்சம். பூமராங் போல தொடங்கிய காலகட்டத்துக்கே வந்து நின்றார் ராமதாஸ்.

ஆனாலும், நாடகக் காதல் என விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது பாமக. கடந்த சில தினங்களுக்கு முன்பு, முதலியார் பெண்ணை கிஸ் அடிப்போம் என சில இளைஞர்கள் உறுதிமொழியேற்றதையும் தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்க எடுத்துக் கொண்டனர்.

இதனால் மிகுந்த வேதனையடைந்தார் திருமாவளவன்.
இந்த நிலையில் தருமபுரியில் இளம்பெண்கள் தொடர்பான கணக்கை வெளியிட்டிருக்கிறார் பாமக முன்னாள் எம்பி டாக்டர் செந்தில்.

அவரது பதிவில், ' சமுதாய மாற்றத்திற்கு மிக அவசியமானது பெண் கல்வி. இதே போன்ற சமூகச் சூழலிலிருந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, கிராமப்புறத்திலிருந்து உயர்கல்வி பயிலச் செல்லும் ஒரு பெண்ணின் மன உளைச்சலை எண்ணிப் பார்க்கிறேன்.

புதியதாக நகரத்துக்குச் சென்று மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் எங்கள் கிராமத்துப் பெண்களின் வேதனைகளையும், அச்சங்களையும் பார்க்கிறேன். அவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் சிவப்புத் தோல் ஆண்களின் நட்பின் மூலம் மட்டுமே தங்களுடைய தாழ்வு மனப்பான்மையை போக்கிக் கொள்ள வேண்டுமா?

தங்களை நிரூபிக்க வேண்டுமா? கூடவே கூடாது. அவர்களும் அம்பேத்கரின் வாழ்க்கைத் தடங்களையே பற்றிச் செல்ல வேண்டும்.

மகாத்மா புலேயும், அம்பேத்கரும், தந்தை பெரியாரும் காட்டிய வழிகள் நெடுஞ்சாலைகளைப் போன்றவை. குறுக்கு வழிகள் தவறான இடத்திற்கு இட்டுச் செல்லும்.

தர்மபுரி புத்தகத் திருவிழாவை ஒட்டி நிகழ்ந்த 'தர்மபுரி வாசிக்கிறது' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தர்மபுரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பேசிய தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிட் கங்காதர் ஒரு விஷயத்தைச் சொன்னார். தர்மபுரி மாவட்டத்தில் சென்ற ஆண்டில் மட்டும் பள்ளி செல்லும் 36 பெண் குழந்தைகள், யாரையாவது காதலித்து வீட்டை விட்டு ஓடி இருக்கிறார்கள் என்பதே அது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி வாட்ஸ்அப் பயன்படுத்தி, அதன் மூலம் ஒரு ஆண் நண்பன் பழக்கமாகி, அவனுடன் ஆந்திராவுக்கு சென்று, அவனாலும் அவன் நண்பனாலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள் என்பது இன்றைய செய்தி. உடுமலைப்பேட்டை கௌசல்யா மறுமணம் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த மண விழா நிகழ்ச்சிக்கு, தன் குடும்பத்தினரால் கொல்லப்பட்ட முன்னாள் கணவர் உடுமலை சங்கரின் பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் அழைத்திருக்கிறார். பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்ணின் வடிவமாக கௌசல்யா இருக்கிறார்.

அவருடைய துணிச்சலுக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று நடுவண் அரசுப் பணியில் இருப்பது. பெண் விடுதலைக்கு சுயசார்பு அவசியம். சுயசார்புக்கு பெண் கல்வி அவசியம். பெண் கல்விக்கு எதிராக நடத்தப்படும் எந்த ஒரு வன்முறையும் அந்த சமூகத்தினை வளரவிடாமல் தடுக்கும் சதியே ஆகும்' எனக் கருத்து சொல்லியிருக்கிறார்.

-அருள் திலீபன்

You'r reading காதலித்து ஓடிப் போன 36 இளம்பெண்கள் - தருமபுரி கணக்கு சொன்ன பாமக நிர்வாகி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை