தாமிரபரணி தண்ணீரில் ரூ.4,000 கோடி ஊழல்! - ஆதாரத்தை வெளியிட்ட திமுக ஜோயல்

DMK Joyal released proof on Rs.4,000 crore corruption in Tamaraparani water

Dec 13, 2018, 13:56 PM IST

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தாமிரபரணி தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வழங்கிடவேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி குடிதண்ணீரில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்றவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

திமுகவின் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் உட்பகுதியில் இருந்து 20 எம்.ஜி.டி.திட்டத்தில் தூத்துக்குடியிலுள்ள 21தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9கோடியே 20லட்சம் லிட்டர் (20மில்லியன் காலன்) தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தினர் செயல்படுத்தி வந்தனர்.

அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்காக தினமும் அதிகப்படியான தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டதால் தாமிரபரணி பாசனத்தில் நடைபெற்றுவந்த ''கார், அட்வான்ஸ் கார், பிசானம்'' ஆகிய முப்போக நெற்பயிர் சாகுபடி விவசாயம் முடங்கி, விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கியது. அதோடு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்திலுள்ள மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பொதுமக்கள் குடிப்பதற்கு போதுமான குடிதண்ணீர் கிடைக்காமல் பரிதவிக்கின்ற அவல நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகள், பொதுமக்களின் நலனை பாதுகாத்திடும் நோக்கத்தில், திமுக தலைவர் மாண்புமிகு., தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது அறிவுறுத்தலின்பேரில், இளைஞர் அணி சார்பில் நான் (தூத்துக்குடி எஸ்.ஜோயல்) ''ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க தடை விதிக்ககோரி'' பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.

ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இதனால் திமுக அரசு இந்த அணைக்கட்டில் இருந்து குடிநீருக்காக மட்டும் தண்ணீர் எடுப்பதற்கு அரசாணை எண்:18(07.03.2008)ன்படி தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஒருலிட்டர் தண்ணீர் எடுப்பதற்குகூட எந்தவித அனுமதியும் இல்லாதநிலையில் சட்ட விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு அரசுத்துறை அதிகாரிகள் ராட்சத மோட்டார்கள் மூலமாக தினம்தோறும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை உறிஞ்சி எடுத்து சுத்திகரித்து 'குடிநீர்' என்ற பெயரில் முழுக்கமுழுக்க மோசடி செய்து தொழிற்சாலைகளுக்கு 1000லிட்டர் தண்ணீர் வெறும் 15ரூபாய் என்று தவிட்டு விலையில் விற்பனை செய்ததில் சுமார் 4000கோடி ரூபாய் ஊழலும் நடைபெற்றுள்ளது.

இதன்அடிப்படையில், கடந்த மாதம் 28ம் தேதி டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம், ''ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து 20எம்.ஜி.டி திட்டத்தில் எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் எடுக்ககூடாது'' என்று அதிரடியாக இறுதி தீர்ப்பு வழங்கியது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பில், ''ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும்'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை மாவட்டம் முழுவதும் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக தட்டுபாடு இன்றி வழங்குவது சாத்தியமாகியுள்ளது. நமது மாவட்டத்தில் மத்திய-மாநில அரசுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 18லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

20எம்.ஜி.டி திட்டத்தில் தினமும் எடுக்கப்பட்டுவந்த 9கோடியே 20லட்சம் லிட்டர் தண்ணீரை தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நபர் ஒருவருக்கு தினமும் 50லிட்டர் வீதம் வழங்கலாம். இதன்படி நான்குபேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு 20எம்.ஜி.டி திட்ட தண்ணீரை நாள்ஒன்றுக்கு குறைந்தபட்சம் சுமார் 200லிட்டர் வரை தாராளமாக வழங்கமுடியும்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை நான்காவது பைப்லைன் திட்டம், 2வது பைப்லைன் திட்டம் மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உட்பட பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி-காயல்பட்டணம் நகராட்சிகள் மற்றும் விளாத்திக்குளம், புதூர், எட்டையபுரம், நாகலாபுரம், வேம்பார், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், பேய்குளம், குலசேகரப்பட்டணம், உடன்குடி, திருச்செந்தூர் உட்பட மாவட்டத்திலுள்ள குக்கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குடிதண்ணீர் தட்டுப்பாடு பரவலாக இருந்து வருகிறது.

இவ்வாறு குடிதண்ணீர் தட்டுப்பாடுவுள்ள கிராமங்கள், நகரங்கள் குறித்து கண்டறிந்திட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தனது தலைமையில் வருவாய்த்துறையினர், குடிநீர் வழங்கல் வடிகால் வாரியத்தினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் அடங்கிய ஆய்வுக்குழுவினை பசுமை தீர்ப்பாய உத்தரவினை செயல்படுத்திடும் வகையில் அமைத்திடவேண்டும்.

இந்த ஆய்வுக்குழுவினரின் குடிதண்ணீர் தட்டுப்பாடு குறித்த ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு வந்த 20எம்.ஜி.டி திட்ட தண்ணீரை தேவைப்படும் பகுதிகளுக்கு தேவையான அளவில் பிரித்து, சரியான அளவில் தட்டுப்பாடு இல்லாமலும், தடை இல்லாமலும் வழங்குவது சாத்தியமாகும்.

எனவே இதற்கான செயல்முறை விதிகளை வகுத்து பொதுமக்களுக்கு அதன்அடிப்படையில் 20எம்.ஜி.டி குடிநீர் வழங்கும் ஆணையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக பிறப்பிக்கவேண்டும் என்று மாவட்ட மக்கள் சார்பாக வேண்டுகிறோம். இதனை செயல்படுத்திடும்பட்சத்தில் ''தூத்துக்குடி மாவட்டம் தமிழகத்திலேயே குடிதண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தண்ணீர் தன்னிறைவு பெற்ற முதல் மாவட்டமாக திகழ்ந்திடும்'' என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்நிலையில், தாமிரபரணி தண்ணீர் மாபியாக்கள் சட்டத்தை வளைத்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தங்களுக்கு சாதகமான இடைக்கால தடை உத்தரவு பெறவதற்கு தீவிரமாக முயற்சிகளை செய்து வருகின்றனர். பசுமை தீர்ப்பாய உத்தரவினை புறந்தள்ளிவிட்டு, மத்திய-மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அது தூத்துக்குடி மாவட்ட மக்களின் அடிப்படை உரிமைகளையும், இயற்கை வளங்களையும் அழிப்பதுடன், மக்களை வஞ்சிக்கின்ற துரோகச்செயலாகும்.

டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை அமல்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் குடிதண்ணீர் தட்டுப்பாடு குறித்து அறிவதற்கான ஆய்வுக்குழுவினை தாமதமின்றி அமைத்திடவேண்டும் என்றும், ஆய்வுக்குழு தரும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் 20எம்.ஜி.டி திட்ட தண்ணீரை மாவட்டத்திலுள்ள மக்களுக்கு வழங்கி, மாவட்டத்தில் நிலவிவரும் குடிதண்ணீர் தட்டுபாட்டுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் திமுக இளைஞர் அணி சார்பில் வழக்கு தொடர்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-அருள் திலீபன்

You'r reading தாமிரபரணி தண்ணீரில் ரூ.4,000 கோடி ஊழல்! - ஆதாரத்தை வெளியிட்ட திமுக ஜோயல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை