குட்கா ஊழல்: விஜயபாஸ்கரை 'தூக்குகிறது’ சிபிஐ! பி.ஏ. சரவணன் சரண்!
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளிடம் இன்று ரகசியமாக விசாரணைக்கு ஆஜரானார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவரிடம் 8 மணிநேரம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விஜயபாஸ்கரை கைது செய்யும் முடிவில் சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக நாம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தடை செய்யப்பட்ட குட்கா போதை பாக்குகளை தமிழகத்தில் தாராளமாக விற்பனை தயாரிப்பாளர் மாதராவிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கினர் என்பதை முதலில் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது.
ஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்று சென்னை உயர்நீதிமன்றமும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
சிபிஐ அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சில நாட்கள் முன்பு விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பல விஷயங்களை சரவணன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து விஜயபாஸ்கரை விசாரித்து கைது செய்யும் முடிவுக்கு வந்தது சிபிஐ.
இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் ரகசியமாக சிபிஐ விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் 8 மணிநேரமாக கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணாவும் இன்றைய விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.