சென்னை: கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு பொங்கல் தினத்தன்று ரூ.15 கோடி அதிகரித்து மொத்தம் ரூ.219 கோடி மது விற்பனையாகி உள்ளது.
வழக்கமான நாட்களை விட பண்டிகை தினங்களில் டாஸ்மாக்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகை காலத்தில் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்வதைவிட, நேரத்துடன் பணத்தையும் டாஸ்மாக்குகளில் செலவு செய்யவே குடிமகன்கள் விரும்புகிறார்கள். சந்தோஷமோ, துக்கமோ அதில் மதுவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்று முக்கிய விழாக்களில் மது விற்பனையும் களைகட்டி வருகிறது. ஆண்டுதோறும் மது விற்பனையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் திருநாளில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. பொங்கல் தினத்தில் ரூ.127 கோடியும், போகி தினத்தன்று ரூ.92 கோடியும் விற்பனையாகி இருக்கிறது. விற்பனையான மது பாட்டில்கள் எண்ணிக்கையில் பார்த்தால் கடந்த ஆண்டை விட 0.3 சதவீதம் குறைவு தான். ஆனால் வருமானம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் மது வகைகள் விலை உயர்த்தப்பட்டது.
கடந்த ஆண்டு மது விற்பனை ரூ.204 கோடியாக இருந்தது. அது இந்த ஆண்டு ரூ.15 கோடி அதிகரித்து ரூ.219 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இதில், பீர் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 1000 மதுக்கடைகள் மூடியதால் எதிர்பார்த்ததைவிட மதுவிற்பனை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
வடசென்னையில் 35 மதுக்கடைகள் மூடப்பட்டதால் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக, ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை அதிகமாக இருந்தது.