ஸ்டெர்லைட்டிடம் சீமான் பணம் பெற்றார் என அவதூறு பரப்புவதா? நெல்லை வியனரசு மீது நாம் தமிழர் பாய்ச்சச்ல்

Naam Thamizhar denies on money from Sterlite

by Mathivanan, Jan 3, 2019, 11:21 AM IST

ஸ்டெர்லைட் தொழிற்சாலையிடம் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பணம் பெற்றுக் கொண்டார் என அக்கட்சியின் மூத்த தலைவர் நெல்லை வியனரசு தெரிவித்த புகார் நாம் தமிழர் உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் 100-வது நாளில் கோர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் போலீசாரால் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நெல்லை வியனரசு உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து வியனரசு ஒதுங்கி இருந்தார்.

இதனிடையே திடீரென ஸ்டெர்லைட்டிடம் சீமான் பணம் பெற்றார் என வியனரசு பேட்டி அளிக்க தொடங்கியிருப்பது நாம் தமிழர் உறுப்பினர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இது தொடர்பாக வியனரசுவின் ஃபேஸ்புக் பக்கத்தில் கடும் விமர்சனங்களை நாம் தமிழர் உறுப்பினர்கள் வைத்து வருகின்றனர்.

அதில் ஒரு பதிவு விவரம்:

நான் பெரிதும் மதிக்கும் #ஐயா_வியனரசு அவர்களே, இனிமேலும் நாம் தமிழர் கட்சியை விமர்சிக்காதீர்கள்.

கட்சி உறுப்பினர் என்ற முறையிலும், உறவினர் என்ற முறையிலும் இதை வெளிப்படையாகவே உங்களுக்கு நான் தெரிவித்து கொள்கிறேன்.

நாங்களும் உங்கள் மீது இது போன்ற அவதூறு (உங்கள் மீதான உண்மையான சில குற்றச்சாட்டு) பரப்பினால் என்னவாகும் என்று சிந்தியுங்கள். (உங்களது இவ்வளவு கால தமிழ் தேசிய அரசியல் மற்றும் தமிழ் தேசிய சிந்தனை களங்கப்பட்டு விடும்).

நானும் இன்னும் சில நாம் தமிழரில் பயணிக்கும் நம் தமிழ் சொந்தங்களும் உங்களை விட வயதில் குறைந்தவர்களே. நாம் தமிழர் கட்சியில் பெரும்பாலானோர் நீங்கள் பெற்ற பிள்ளைகளின் வயதுடையவர்கள் தான் அதிகம் உள்ளனர்.
அவர்கள் எல்லோரும் (நான் உட்பட) உங்கள் மீது கொண்ட மரியாதையினால் தான் உங்களை பற்றிய எதிர் கருத்துகள் மற்றும் பதிவுகள் யாரும் எழுதவில்லை.

சில நேரம் யாராவது உங்களை தவறாக அல்லது உங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் அதை #சாதியவாதமாக திரித்து சித்தரித்து விடுவார்கள் சில கள்ள நரிகள் என்பதனாலேயே நம் உறவுகள் அனைவரும் அமைதி காத்து வருகின்றனர்.

சமீப காலமாக, நீங்கள் எடுக்கும் தவறான முடிவுக்கும், ஒவ்வொரு நகர்வுக்கும் காரணம் அந்த நிலைக்கு தள்ளப்பட்டீர்கள் அல்லது நிர்ப்பந்திக்கப்பட்டீர் என்பதே நிதர்சனமான உண்மை.

மீண்டும் சொல்கிறேன்,

கட்சி உறுப்பினர் என்ற முறையிலும்,
சொந்த உறவினர் என்ற முறையிலும்
வேண்டுகிறேன், தயவு செய்து நமது நாம் தமிழர் கட்சி பற்றிய அவதூரான பொய்யான விமர்சனங்களை பரப்பாதீர்கள்.

எங்கிருந்தாலும் உங்கள் தமிழ் தேசிய களப்பணி தொடர என் வாழ்த்துகள்.

நன்றி

நாம் தமிழர்.
சீத்தார் குளம்
மூ. வைகுண்ட மாரி
வீரத்தமிழர் முன்னணி
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் .


இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது. இதேபோல ஏராளமான நாம் தமிழர்கள் வியனரசுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

You'r reading ஸ்டெர்லைட்டிடம் சீமான் பணம் பெற்றார் என அவதூறு பரப்புவதா? நெல்லை வியனரசு மீது நாம் தமிழர் பாய்ச்சச்ல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை