சபரிமலை பிரச்னையை வைத்து தமிழகத்தில் பா.ஜ.க வன்முறையை தூண்டுகிறது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததைக் கண்டித்து கேரளாவில் பா.ஜ.க.வும், இந்துத்வா ஆதரவு அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. சென்னையிலும் நேற்று பா.ஜ.க.வினர் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.
பல்லாவரத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்த போராட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உருவப் படத்தை தீ வைத்து கொளுத்தினர். நள்ளிரவில் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள கேரளா இல்லம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது.
சேதப்படுத்தப்பட்ட கேரளா பவன் கட்டடத்தை இன்று காலை மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், சபரிமலை விவகாரத்தில் தமிழகத்தில் வன்முறையை பா.ஜ.க. தூண்டுகிறது.
நள்ளிரவில் முகத்தை துணியால் மூடியபடி பா.ஜ.க.வினர் கேரளா பவனில் வன்முறையில் ஈடுபட்டு சேதம் விளைவித்துள்ளனர். சபரிமலை விவகாரத்தை அரசியலாக்கப் பார்க்கிறது பா.ஜ.க. என்றும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் பினராயி விஜயன் படத்தை எரித்து போராட்டம் நடத்திய தமிழிசை சவுந்தர்ராஜன் மீது பல்லாவரம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சென்னையில் கேரள அரசுக்குச் சொந்தமான அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், உணவு மற்றும் தங்கும் விடுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.