சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறியுள்ளனர் அதிமுக எம்பிக்கள். ஐஏஸ் சங்கம் அளித்த ஆதரவைத் தொடர்ந்து, அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சுகாதாரத்துறை செயலாளரை விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். தமிழக அமைச்சர் இவ்வாறு குறை கூறியதால், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார் ராதாகிருஷ்ணன்.
அமைச்சரின் புகாரால் அதிர்ச்சியடைந்த ஐஏஎஸ் அதிகாரிகள் நலச் சங்கம், அமைச்சர் சண்முகம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேச வேண்டும் எனக் கடிதம் எழுதியிருந்தது. இந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியானதால், கொதிப்படைந்தனர் அதிமுக பொறுப்பாளர்கள்.
இன்று எம்பிக்கள் ஹரியும் அருண்மொழித் தேவனும், ராதாகிருஷ்ணனை விமர்சித்துப் பேட்டியளித்தனர்.
தொடர்ச்சியாக ஓர் அதிகாரி மீது ஆளும் தரப்பு நடத்தும் தாக்குதலை அதிர்ச்சி விலகாமல் கவனிக்கிறார்கள் கோட்டையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்.
'ஜெ.ராதாகிருஷ்ணனை மட்டும் குறிவைப்பதன் பின்னணியில் அரசியல் உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் செயலாளரை பலிகடாவாக்குவதற்கு முயற்சி செய்கிறார்களோ என சந்தேகப்படத் தோன்றுகிறது. ஆறுமுகசாமி ஆணையத்தில், எம்ஜிஆருக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சையோடு ஒப்பிட்டு வாக்குமூலம் கொடுத்திருந்தார் ராதாகிருஷ்ணன்.
ஆணையத்தின் விசாரணையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள், அவரை வெளிநாடு அழைத்துச் செல்லாதது, 1984-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வை ஒப்பிடும் (எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது நடந்தவை) கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு உரிய பதிலை அளித்தார் ராதாகிருஷ்ணன். அப்படியிருக்கும்போது, மீண்டும் மீண்டும் அவரைக் குற்றம்சாட்டுவது முறைதவறிய செயல்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சமயத்தில் அனைத்து விஷயங்களையும் அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் தான் கவனித்து வந்தார். அவரைத் தாண்டி ராதாகிருஷ்ணனால் செயல்பட முடியாது. அந்த சமயத்தில் சசிகலா சம்மதத்தோடு சிகிச்சை விவகாரங்களை முன்னின்று நடத்தியதும்தான் அவர்தான்.
ஆணையத்தின் விசாரணையில் அவரும் ஆஜராகியிருக்கிறார். அப்போலோவில் கொடுக்கப்பட்ட முக்கிய சிகிச்சைகளில், எக்மோ சிகிச்சை அளித்த போது மட்டும்தான் ராதாகிருஷ்ணன் சம்மதம் தெரிவித்திருக்கிறார். மற்ற அனைத்துக்கும் சசிகலாவும் ராமமோகன ராவும்தான் பொறுப்பு. அவர்களை நேரடியாகக் கொண்டு வராமல், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலருக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் மூலம் தகவல் வெளிவரும் என நினைக்கிறார்கள். அதனால்தான் அமைதியாக வேலையைக் கவனித்து வரும் ராதாகிருஷ்ணனை சீண்டியிருக்கிறார்கள்' என்கின்றனர் சக அதிகாரிகள்.