அமமுக துணைப் பொதுச்செயலர் தினகரனை திமுகவின் நாளேடான முரசொலி மிக கடுமையாக ஒருமையில் விமர்சித்திருந்தது. அதே பாணியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான ‘நமது அம்மா’ நாளேடும் தினகரனை வெளுத்து வாங்கியிருக்கிறது.
இன்றைய நமது அம்மா நாளேட்டில் இடம்பெற்றுள்ள கட்டுரை:
ஓட்டுக்கு பத்தாயிரம் கொடுத்தாலும் அதிமுக ஜெயிக்காது- திகார்கரன்
மிஸ்டர் டோக்கன்... வாழ வைத்த இந்த இயக்கத்தை உன்னைப் போலவே வீழ வைப்போம் என்று ஊளையிட்ட கும்பலெல்லாம் காலப்போக்கிலே என்ன ஆனார்கள் என்பதை கொஞ்ச நேரம் கணக்கெடுத்து பாரு...
அம்மா போட்ட பதவிக்கெல்லாம் கழகத் தொண்டனிடம் அம்மாவுக்குத் தெரியாமல் அறுவடை நடத்திய மாஃபியா குடும்பத்தின் மடாதிபதியே... கோல்டன் மிடாஸ் என்கிற பெயரிலே மதுபான ஆலை தொடங்கியும்... ரெட்டிச் சகோதரர்களின் லக்ஸ் சினிமாவை பறித்தும்... பணந்தின்னும் கூட்டத்தின் படைத்தலைவனே... இந்த உத்தம இயக்கத்தை உறிஞ்சி கொழுத்து 1990களிலேயே லண்டனிலே ஓட்டல் வாங்கியும், சிங்கப்பூர் பிரஜை என்று சீட்டிங் செய்தும் சொத்து குவித்த கொள்ளைக் கூட்டத்தின் மூளையான முட்டைப் போண்டாவே....
பத்தாண்டு காலம் பாண்டிச்சேரி பண்ணை வீடுகளிலே பதுங்கிக் கிடந்துவிட்டு வங்கத்து கடலோரம் உறங்குகிற எங்கள் எம்மா எழுந்துவரமாட்டார் என்கிற தைரியத்தில் வாயெல்லாம் நுரை தள்ள வக்கணை பேசுகிற வாய்ச்சவடாலே... இரண்டு நீதிமன்றங்களில் இருபத்தெட்டு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பிணையில் அலைகிற பெஃரா பேர்வழியே...
கையூட்டு கொடுத்து கழகத்தைக் கைப்பற்ற கனா கண்டு, கையும் களவுமாக அகப்பட்டு குற்றம் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்ட நிலையில், விரைவில் திகாருக்கு தியாகப் பயணம் மேற்கொண்டு களி தின்னக் காத்திருக்கும் கபோதியே...
மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு சாட்சியாக மானுட வடிவத்தில் வாழ்ந்து போன, மகோன்னதமாம் மக்கள் திலகம்.... தன் உதிரத்தில் விதையூன்றி உயிராக வளர்த்த இயக்கத்தை வீழ்த்துவேன் என்று கொக்கரிக்கிற கோமாளியே, எழுதி வைத்துக் கொள் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் உயிராக காத்து நிற்கும் இந்த இயக்கத்தை அழிக்க எண்ணியவர்கள், பாதி பேர் சிதைக்குப் போயிருக்கிறார்கள். மீதி பேர் சிறைக்குப் போயிருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு... இதனை நீ உணரும் காலமும், கால்டவுசர் போட்டுக் கொண்டு காராகிருகத்திற்கு நகரும் நேரமும் உனக்கு விரைந்து வந்து கொண்டிருக்கிறது.
அதுவரையில் அணையப் போகும் திரியின் ஆட்டம் போல் மனநோயாளிச் சிரிப்போடு உன் மமதை பேச்சு தொடரட்டும்... தொடரட்டும்...
இவ்வாறு நமது அம்மா நாளேட்டில் எழுதப்பட்டுள்ளது.