உலகப் புகழ் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு லோக்கல் ஆளுங்கட்சி புள்ளிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு போட்டி நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடை வந்த போது பாரம்பரிய உரிமையை மீட்டெடுக்க ஒட்டுமொத்த உலகத் தமிழர்கள் அறவழியில் ராப்பகல் பாராது போராடி வெற்றி கண்டனர். இந்தப் போராட்டம் உலக சரித்திரத்தில் இடம் பெற்றது எனலாம். உலகத் தமிழர்கள் போராடி மீட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவது யார் என்ற அதிகாரப் போட்டியால் இந்த ஆண்டு போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தை முதல் நாளில் அவனியாபுரம், 2-ம் நாளில் பாலமேடு, 3-ம் நாளில் அலங்காநல்லூர் என பன்னெடுங்காலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. 2017-ல் ஜல்லிக்கட்டுக்கு தடை என்றவுடன் தமிழக இளைஞர்கள், மாணவாகள் வெகுண்டெழுந்தனர்.
தன்னெழுச்சியாக மாநிலம் முழுவதும் நகரம், பட்டி தொட்டிகளில் தொடங்கிய போராட்டம் உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள தமிழர்களிடத்தும் பரவியது. இதன் விளைவு அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்தது. இதனால் கடந்த 2 வருடமாக ஜல்லிக்கட்டுப் புகழ் உலகம் முழுவதும் மேலும் பரவியது என்றே கூறலாம். இந்தாண்டோ திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடக்குமா ? என்ற கேள்விக்குறி இந்த நிமிடம் வரை நீடிக்கிறது. இதற்குக் காரணம் லோக்கல் அரசியல் என்பது தான் வேதனை. ஜல்லிக்கட்டு நடத்த அமைக்கப்பட்ட குழுவில் ஆளும் கட்சித் தரப்பினரும், குறிப்பிட்ட சமுதாயத்தினருமே இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு.
ஜல்லிக்கட்டு நடத்தும் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு கிராமங்களில் அந்தந்த ஊரில் உள்ள அனைத்து சமுதாயத்தினரையும் குழுவில் இடம் பெறச் செய்ய வேண்டும் என கோர்ட்டுக்கு சென்று விட்டனர். மதுரை உயர் நீதிமன்றமும் அக்கறை எடுத்து சமரச ஏற்பாடு செய்தும் உடன்பாடு ஏற்படவில்லை. மாவட்ட நிர்வாகமும் கைவிரித்து விட வெறுத்துப் போன நீதிபதிகள் ஜல்லிக்கட்டு நடத்த ஒத்துழைப்பு தராவிட்டால் போட்டி நடத்த தடை விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்து மாற்று ஏற்பாடு ஒன்றையும் தெரிவித்தனர். அதன் படி ஓய்வு பெற்ற நீதி பதியை நீதிமன்ற கமிஷனராக நியமித்து அவரது தலைமையில் குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப் போவதாக அறிவித்தது.
இதனையும் ஏற்க சம்பந்தப்பட்ட கிராம மக்கள் சம்மதிக்காததால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போதைய பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணமே ஆளும் கட்சியினர் தான் என குற்றம்சாட்டியுள்ளது திமுக தரப்பு. ஜல்லிக்கட்டுக்குழுவில் ஆளும் கட்சியினரே இடம் பெற்றுள்ளதுதான் பிரச்னைக்கு காரணம். அதிகாரிகளும் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக நடந்து பிரச்னையை பெரிதுபடுத்தி விட்டனர். கடந்த வருடங்களைப் போன்றே அனைத்துத் தரப்பினரும் குழுவில் இடம் பெறச் செய்து ஜல்லிக்கட்டை சுமூகமாக நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 14-ந் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இப்படியாக அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்குமா ?என்ற சந்தேகம் எழுந்துள்ளது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் அக்கறை எடுத்து உலகப் புகழ்
ஜல்லிக்கட்டை வழக்கம் போல் உற்சாகமாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே ஜல்லிக்கட்டை மீட்டெடுக்கப் போராடிய உலகத் தமிழ் சமுதா யத்திற்கு மதுரை மாவட்ட மக்கள் செய்யும் நன்றிக்கடன் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை எனலாம்.