பயனர்களின் தகவல்களை பெறக்கூடிய முகநூல் நிறுவனத்தின் செயலியை தனது ஐஓஎஸ் ஸ்டோரிலிருந்து நீக்கும்படி ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்தச் செயலி பயன்பாட்டில் இருக்கும்.
பயனர்களின் தனிப்பட்ட செய்திகள், மின்னஞ்சல்கள், இணைய தேடுதல்கள் போன்ற அனைத்து செயல்பாடுகளையும் குறித்து தகவல் திரட்டுவதற்கு அனுமதி கோரும் ஃபேஸ்புக் ஆராய்ச்சி செயலி (Facebook Research ap), ஆப்பிள் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு கொள்கையை மீறுவதால் அதை தங்கள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இச்செயலியை தங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவும் 13 முதல் 35 வயதுடைய பயனர்களுக்கு மாதந்தோறும் 20 டாலர் மதிப்பிலான வெகுமதிகளை ஃபேஸ்புக் வழங்கி வருகிறது. இதுபோன்று முன்பு பயன்படுத்தி வந்த ஓனவோ (Onavo) பிராடெக்ட் என்ற செயலியை முகநூல் நிறுவனம் ஏற்கனவே ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கள் செயலியை குறித்து செய்திநிறுவனம் எழுப்பியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள முகநூல் நிறுவனம், "எங்களுடைய செயலியில் எந்த ரகசியமும் இல்லை.
அதன் பெயரே ஆராய்ச்சி செயலிதான். பயனர்களின் அனுமதி பெற்றே இதில் இணைக்கிறோம்; இதில் பங்குபெறுவதற்காக பயனர்களுக்கு பணமும் அளிக்கப்படுகிறது. சந்தையின் போக்கை ஆராயும் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளவர்களில் 5 விழுக்காட்டினர் டீன்ஏஜ் என்னும் பதின்ம வயதினராவர். அவர்கள் அனைவருமே பெற்றோரின் ஒப்புதல் பெற்றே இதில் இணைந்துள்ளனர்," என்று கூறியுள்ளது.