அவசர உதவி அழைப்புக்கென்று 112 என்ற ஒரே எண் விரைவில் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. காவல்துறைக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, போக்குவரத்து விதிமீறலுக்கு 103, மருத்துவ உதவிக்கு 108, குழந்தைகள் பாதுகாப்புக்கு 1098, பெண்கள் பாதுகாப்புக்கு 1091 என்று பல எண்களை அவசர கால உதவிக்கு நாம் அழைக்க வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் நினைவில் வைத்திருப்பது கடினம்.
அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலெல்லாம் அனைத்து வகை அவசர சேவைகளுக்கும் ஒரே எண்ணை தொடர்பு கொண்டால் போதுமானது. எந்த உதவி தேவையோ அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
தற்போது அனைத்து வகை அவசர உதவிகளுக்கும் '112' என்ற எண்ணில் அழைக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வசதி இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஆண்டே நடைமுறைக்கு வந்து விட்டது. பிப்ரவரி 19ம் தேதி முதல் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், கேரளா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இச்சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
புதிதாக இந்தியாவில் விற்பனைக்கு வரக்கூடிய அனைத்து ஸ்மார்ட் மற்றும் ஃபீச்சர் மொபைல் போன்களில் 112 என்பது அவசர கால எண்ணாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 'பவர்' பொத்தானை மூன்று முறை அழுத்தினாலும், சாதாரண மொபைல் போனில் 5 மற்றும் 9 ஆகிய எண்களை விடாமல் அழுத்திக் கொண்டிருந்தாலும் இந்த அவசர உதவி மையத்தோடு தொடர்பு கிடைக்கும்.
112 என்ற அவசர கால செயலியும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி அவசர உதவி நேரங்களில் எந்த எண்ணை அழைப்பது என்று திணறவேண்டியதில்லை. 112 என்று அழுத்தி காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.