வாட்ஸ்அப்பில் சர்ச்சை பதிவா? நீங்களே புகார் செய்யலாம்!

செய்திகளை பகிர்ந்து கொள்ள பயன்படக்கூடிய சமூக ஊடகமான வாட்ஸ்அப்பில் தரக்குறைவானவை மட்டுமல்ல, வெறுப்புணர்வு மற்றும் கலவரத்தை தூண்டக்கூடிய தவறான பதிவுகள் ஏராளமாக வருகின்றன. வெறுப்புணர்வை தூண்டக்கூடிய செய்திகள் மக்களிடையே விரைவாக பரவி, கும்பலாக கூடி தாக்குதல் நடத்துவது மற்றும் உயிரைப் பறிப்பது வரை கொடுஞ்செயல்கள் நடைபெற காரணமாகின்றன. சர்ச்சை, வசவு, மிரட்டல் மற்றும் கீழ்த்தரமான பாலியல் சார்ந்த பதிவுகளும் மலிந்து விட்டன.

இதுபோன்ற தரக்குறைவான பதிவுகளின் தொடக்கப் புள்ளியை கண்டுபிடிக்குமாறு வாட்ஸ் அப் நிறுவனத்தை இந்திய அரசு ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளது. இதுவரைக்கும் அந்நிறுவனம் அதற்குச் செவிகொடுக்கவில்லை. பயனர்களின் தனியுரிமையை அது பாதிக்கும் என்று கூறி வருகிறது.

வேண்டாத செய்திகளை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை வாட்ஸ்அப் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் உலக அளவில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏறக்குறைய 20 லட்சம் பயனர் எண்களை ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்திய தொலைதொடர்பு துறையின் கட்டுப்பாட்டு அதிகாரி ஆஷிஷ் ஜோஷி கடந்த வெள்ளியன்று, "தரக்குறைவான, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, மோசமான மற்றும் கொலை மிரட்டல் போன்ற வாட்ஸ்அப் பதிவுகள் யாருக்காவது வந்தால், அதன் திரைப்பதிவையும் (ஸ்கிரீன் ஷாட்) பதிவை அனுப்பிய நபரின் மொபைல் எண்ணையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மூலம் நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம்," என்று ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைதொடர்பு துறை பிப்ரவரி 19ம் தேதியே சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது.

ஆட்சேபகரமான, தரக்குறைவான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை கொண்ட பதிவுகளை அனுப்பும் பயனரின் எண்களை தொடர்புடைய சேவை நிறுவனத்திற்கு அரசு நிறுவனம் அனுப்பி வைத்து அந்த எண்ணை முடக்கும்படி கேட்டுக்கொள்ளும். சில வாட்ஸ்அப் பதிவர்கள், வைஃபை இணைப்பு மூலமாகவும் அனுப்பக்கூடும். வைஃபை இணைப்பும் தொலைதொடர்பு சேவை நிறுவனம் அல்லது இணைய சேவை நிறுவனம் மூலமே வழங்கப்படுவதால், அந்நிறுவனங்கள் மூலம் குறிப்பிட்ட அந்த எண் முடக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

READ MORE ABOUT :