"ஓகே கூகுள்" என்ற கட்டளையை ஏற்று திறந்திட்ட ஆண்ட்ராய்டு போன்களில் இனி அந்த வசதியை உபயோகிக்க முடியாது என்பது தெரிய வந்துள்ளது. பயனரின் குரலை ஒப்பிட்டு ஸ்மார்ட்போன்களை திறக்கும் 'வாய்ஸ் மேட்ச்' முறையும் புழக்கத்தில் இருந்து அகற்றப்படும் என கூறப்படுகிறது.
பாதுகாப்பினை அதிகப்படுத்தும் வகையில், மேம்படுத்தப்படும் கூகுள் செயலியில் "ஓகே கூகுள்" மற்றும் 'வாய்ஸ் மேட்ச்' ஆகிய வசதிகள் இணைக்கப்படாது. பயனரின் குரலை பதிவு செய்து அல்லது அதே தொனியில் பேசி போன்களை இயக்குவதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் செயலியின் 9.27 மேம்படுத்தலின்போதே 'மோட்டோ இசட்'மற்றும் 'பிக்ஸல் எக்ஸ்எல்' ஆகிய போன்கள் இவ்வசதியை இழந்து விட்டன. இன்னும் பல ஆண்ட்ராய்டு போன்களில் இவ்வசதி இருந்து வருகிறது. கூகுள் செயலியின் 9.31 மேம்படுத்தலின்போது, அனைத்து போன்களும் குரல் ஒத்திசைவு மற்றும் கட்டளை மூலம் திறக்கும் வசதியை இழந்துவிடும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தங்களது 'பிக்ஸல் 3' மற்றும் 'பிக்ஸல் 3 எக்ஸ்எல்' ஆகிய போன்களை அறிமுகம் செய்யும்போதே கூகுள் நிறுவனம் 'குரல் ஒத்திசைவு மூலம் திறத்தல்' வசதியை அளிக்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டது.
கூகுள் பயனர்கள் இதை வசதி குறைவாக உணர்ந்தாலும், பாதுகாப்பு அதிகரிக்கும் என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.