ட்விட்டர் பற்றி இந்தியாவிலுள்ள பயனர்களுக்கு போதுமான அறிவு இல்லை. அவர்களுக்கு அநேக விஷயங்களை கற்றுக்கொடுக்க விரும்புகிறோம் என்று ட்விட்டர் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுள் ஒருவரான காலின் குரோவெல் கூறியுள்ளார்.
அவதூறான மற்றும் வேதனை தரக்கூடிய ட்விட்டர் பதிவுகள் பற்றி எப்படி புகார் செய்வது என்று இந்திய பயனர்களுக்குத் தெரியவில்லை. ட்விட்டரில் கொடுக்கப்பட்டிருக்கும் புகாருக்கான வசதிகளை குறித்து அநேகருக்கு தெரிந்திருக்கவில்லை என்றும் காலின் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பயனர்கள் தங்களைப் பற்றி வந்திருக்கும் அவதூறான பதிவுகளை தங்கள் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு, ட்விட்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பதிவிலேயே குறிப்பிடுவதாகவும், இதுபோன்ற பதிவுகளை குறித்து குறைந்த எண்ணிக்கையிலேயே இந்தியாவிலிருந்து புகார் செய்யப்படுவதாகவும் கூறியுள்ள காலின், அவதூறு பதிவுகளின் திரைப்பதிவை (ஸ்கிரீன்ஷாட்) இணைத்து ட்விட்டருக்கு புகார் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
தனிப்பதிவு, தன் விவரம் மற்றும் நேரடி, பலபடி பதிவுகள் என அனைத்தும் ஒரே புகாரில் இணைக்கப்பட்டால் அது குறித்து ஆய்வு செய்வது எளிதாக அமையும். ட்விட்டரில் நாளொன்றுக்கு செய்யப்படும் பதிவுகளின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டும் நிலையில், ஒவ்வொரு பதிவையும் ட்விட்டர் நிறுவனத்தார் வாசிக்க இயலாத நிலை உள்ளது. புகார் செய்வதற்கான பல வழிமுறைகள் (டூல்) ட்விட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி புகார் செய்ய வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்தின் பொதுக்கொள்கைக்கான உலகளாவிய பிரிவின் துணை தலைவர் காலின் குரோவெல் கூறியுள்ளார்.
ட்விட்டர் தளம் அரசியல் ரீதியில் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பதில் உதவி செய்வதற்காக கடந்த பிப்ரவரி 25ம் தேதி தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் காலின் குரோவெல் முன்னிலையானார். 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் மூலம் தேர்தலின் அந்நியநாடுகளில் தலையீடு குறித்து தாங்கள் அதிக விஷயங்களை கற்றுக்கொண்டிருப்பதாகவும், கற்றுக்கொண்ட விஷயங்களை நடந்து முடிந்த மெக்ஸிகோ, பிரேஸில் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இடைப்பருவ தேர்தல்களில் செயல்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் விரைவில் நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலிலும் இதே உத்திகளை கையாள இருப்பதாக தெரிவித்த அவர், இந்தியாவில் பல லட்சம் பேர் புதிதாக வாக்குரிமை பெற்று முதன்முறையாக வாக்களிக்க உள்ள நிலையில் தங்கள் வாக்கு உரிமையை செயல்படுத்துவது எப்படி என்பது குறித்த தகவல்களை புதிய வாக்காளர்களுக்கு அளிப்பதற்கு முயற்சி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.