வீராங்கனைகள் மட்டும் விண்வெளியில் நடக்கும் நிகழ்வுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா ஏற்பாடு செய்துள்ளது. மார்ச் மாதம் 29ம் தேதி அமெரிக்க வீராங்கனைகள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நடக்க இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, மார்ச் மாதத்தை பெண்களின் வரலாற்று மாதமாக அனுசரித்து வருகிறது. பொறியியல், விண்வெளி, கணிதம் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை கௌரவிக்கும் வண்ணம் அவர்கள் பற்றிய தகவல்களுக்கு பிரத்தியேக இடத்தை நாசா, மார்ச் மாதம் தருவது வழக்கம். பெண்கள் தினமான மார்ச் 8ம் தேதி, வீராங்கனைகள் மட்டுமே பங்குபெறும் விண்வெளி நடை குறித்து நாசா அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1983ம் ஆண்டு முதல் அமெரிக்க விண்வெளி வீராங்கனையாக சல்லி ரைட் என்பவர் ஏனைய நான்கு வீரர்களுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டார். 1984ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி, விண்வெளியில் ரஷ்ய வீராங்கனை ஸ்வெட்லானா சவிட்ஸ்காயா நடந்ததே, விண்வெளியில் பெண் நடந்த முதல் நிகழ்வாகும். அதற்கு ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க வீராங்கனைகள் அன்னி மெக்லைன் மற்றும் கிறிஸ்டினா கோச் ஆகிய இருவரும் மார்ச் 29ம் தேதி விண்வெளியில் நடக்க இருக்கிறார்கள். விண்கலத்திற்கு மின்கலங்களை மாற்றும் பணிக்கென இவர்கள் இருவரும் விண்வெளியில் நடப்பார்கள். ஏறத்தாழ 7 மணி நேரம் இந்த இரு வீராங்கனைகளும் விண்வெளியில் நடக்க வேண்டிய அவசியம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இதில் கலந்து கொள்ள இருக்கும் அன்னி மெக்லைன், நாசாவின் இன்னொரு வீரரான நிக் ஹாக் உடன் மார்ச் 22ம் தேதி விண்வெளியில் நடக்க இருக்கிறார். 1998 டிசம்பர் மாதம் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இதுவரை 213 முறை விண்வெளியில் வீரர்கள் நடந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் எட்டு முறை விண்வெளியில் வீரர்கள் நடந்துள்ளனர். அவற்றுள் 8 மணி நேரம் மற்றும் 13 நிமிடங்கள் நடந்தது அதிக நேரம் பிடித்த நிகழ்வாகும்.
மார்ச் 29ம் தேதி நடக்க இருக்கும் வீராங்கனைகள் விண்வெளி நடைபயணத்திற்கான கட்டுப்பாட்டு பணிகளை அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள ஜாண்சன் விண்வெளி மையத்திலிருந்து மேரி லாரன்ஸ் மற்றும் கிறிஸ்டன் பாஸியால் ஆகியோர் கவனிப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.