வீடியோ பகிர் தளமான டிக்டாக், தமிழ் உள்பட பத்து இந்திய மொழிகளில் பாதுகாப்பு குறிப்புகளை வழங்கியுள்ளது. டிக்டாக்கை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து பயிற்றுவிக்கும் முகனாக, டிக்டாக்கின் பாதுகாப்பு மையம், நிறுவனத்தின் பாதுகாப்பு கொள்கைகள், பயன்கருவிகள் (டூல்ஸ்) மற்றும் கருத்துமூலங்களை இந்திய மொழிகளில் கொடுத்துள்ளது.
டிக்டாக் பாதுகாப்பு மையம், வழிகாட்டும் குறிப்புகளை தமிழ், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரிய மொழிகளில் வழங்கியுள்ளதோடு, துன்புறுத்தும் பதிவுகளை கையாள்வது மற்றும் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த பக்கங்களுக்கான இணைப்பையும் தந்துள்ளது.
இந்தியாவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சட்டவிரோதமான பதிவுகளை பதிவேற்றம் செய்யாமலும் பகிர்ந்திடாமலும் மரியாதைக்குரிய விதத்தில் பொறுப்புணர்வுடன் சமூக ஊடகங்களை பயன்படுத்தும்படி தங்கள் பயனர்களை டிக்டாக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவிலுள்ள பயனர்கள், வயதுக்கேற்ற பதிவுகளை மட்டும் பார்க்கக்கூடிய வசதி மற்றும் நேர கட்டுப்பாடு ஆகியவற்றை நிறுவிக்கொள்ளக்கூடிய மட்டுறுத்தல் வகை (Restricted Mode) குறித்தும் வீடியோ பதிவுகள் குறித்து புகார் அளிப்பது, தடை செய்வது, அழிப்பது போன்ற செயல்கள் குறித்தும் விளக்கமாக அறிந்து பாதுகாப்பான விதத்தில் பயன்படுத்த உதவும் வண்ணம், அர்ப்பணிப்பு உணர்வோடு இந்திய மொழிகளில் இந்தக் குறிப்புகளை தந்துள்ளதாகவும் டிக்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெறுப்புணர்வு கொண்ட மற்றும் மோசமான பின்னூட்டங்களை தடுக்கக்கூடிய வசதியையும் சமீபத்தில் டிக்டாக் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.