உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை தங்கள் பயனர்கள் கட்டணமின்றி பார்க்கலாம் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
2019 ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் போட்டிகளை ஜியோ பயனர்கள் கட்டணமின்றி பார்க்கும்படி ரிலையன்ஸ் ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவில் கிரிக்கெட் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள மக்கள் அதிகமாக நாடும் நிறுவனங்களுள் தங்கள் நிறுவனமும் ஒன்று என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை தங்கள் நிறுவனம் மூலம் 30 கோடி பயனர்கள் கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை கண்டுகளித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.
ஹாட்ஸ்டார் (Hotstar) நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ இம்முயற்சியை செய்கிறது. ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ஹாட்ஸ்டார் தனது விளையாட்டுகளை காணக்கூடிய ஸ்போர்ட்ஸ்பேக் கட்டணம் ரூ.365 ஐ நீக்கியுள்ளது. ஹாட்ஸ்டாருக்கு செல்லும் அனைத்து ஜியோ பயனர்களுக்கும் உலக கோப்பை போட்டிகளை காணும் இணைப்பு கிடைக்கும். ஜியோ தொலைக்காட்சி செயலி (JioTV) வழியே செல்பவர்கள், ஹாட்ஸ்டார் தளத்துக்கு வழிநடத்தப்படுவார்கள்.
மைஜியோ செயலியில் (MyJio app) பயனர்கள் மினிகேம் விளையாட முடியும். கூடவே போட்டிகள் முடிவுகள் பற்றிய கேள்விகளுக்கு ஜியோ பயனர்கள் மற்றும் பயனர் அல்லாதவர்களும் பதிலளிக்க முடியும். சரியான பதில்களுக்கு மதிப்பு புள்ளிகள் அளிக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும். தற்போது மினிகேம் விளையாட்டு MyJio செயலியில் கிடைக்கிறது.
கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு புதிதாக 251 ரூபாய்க்கான திட்டம் ஒன்றையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி 51 நாள்களுக்கு 102 ஜிபி அதிவேக டேட்டா இணைப்பு கிடைக்கும். இதை பயன்படுத்தி கிரிக்கெட் போட்டிகளை மட்டுமின்றி அனைத்து தளங்களையும் பார்க்கலாம்.