பயனர் பற்றிய தகவலுக்கு பணம்: ஃபேஸ்புக்கின் ஸ்டடி செயலி

Facebook Study app that pays users for data on app usage launched in India, US

by SAM ASIR, Jun 13, 2019, 07:49 AM IST

தாங்கள் பயன்படுத்தும் செயலிகள் பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ளும் பயனர்களுக்குப் பணம் அளிக்கக்கூடிய ஸ்டடி (Study) என்ற செயலியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சந்தை பற்றிய ஆய்வு செய்யக்கூடிய ரிசர்ச் (Research) என்ற செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்தது. பதின்ம வயது பயனர்கள் அநேகர் இதைப் பயன்படுத்தினர். ஆப்பிள் நிறுவனம், ரிசர்ச் செயலி தனது நெறிமுறைகளுக்கு மாறாக இயங்குகிறது என்று கூறி ஆப்பிள் ஸ்டோரிலிருந்து நீக்கியது. தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் ரிசர்ச் செயலியை முற்றிலுமாக மூடிவிட்டது.

ஒனவோ பிராடெக்ட் (Onava Protect) என்ற மெய்நிகர் தனியார் இணைப்பு சேவையும் செயலி மூலம் பொதுவெளியில் சேகரிக்கும் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பி வந்தது. இந்தச் செயலியும் மூடப்பட்டுவிட்டது.

புதிய செயலியாகிய ஸ்டடி முந்தைய இரு செயலிகளிலிருந்தும் வேறுபட்டது என்றும், தற்போது அது கூகுள் ப்ளே ஸ்டோரில் மட்டுமே கிடைக்கும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய செயலி, பயனர்கள் எந்தெந்த செயலிகளை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர்; அந்தச் செயலிகளின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது போன்ற தரவுகளை சேகரித்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அளிக்கும். இதன் மூலம் போட்டி நிறுவனங்களின் எந்தச் சேவைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பதை ஃபேஸ்புக் நிறுவனம் தெரிந்து கொள்ள முடியும்.

ஸ்டடி செயலி, பயனர்களின் கடவுச்சொற்கள் மற்றும் பயனர் கணக்கு விவரங்களை பின்தொடராது என்றும், பயனர்களின் தரவுகள் சேகரிப்படுவது குறித்து அவ்வப்போது நினைவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும், வரும் நாள்களில் ஐஓஎஸ் இயங்குதளத்திற்கான இச்செயலியின் வடிவம் வெளியிடப்படும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

இச்செயலி மூலம் திரட்டப்படும் தகவல்கள் விளம்பரங்களை காட்டுவதற்கு பயன்படுத்தப்படாது என்றும் தங்களால் சேகரிக்கப்படும் பயனர் தகவல்கள் மூன்றாம் நபர் நிறுவனங்களுக்கு அளிக்கப்படாது என்றும் ஃபேஸ்புக் உறுதி கூறியுள்ளது. கடந்த ஆண்டு எழுந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா முறைகேட்டிற்குப் பிறகு இதுபோன்ற உறுதிமொழிகளை ஃபேஸ்புக் நிறுவனம் கவனமாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயனர்கள் பலர் நிறுவனங்கள் அளிக்கும் தனியுரிமை கொள்கைகளை வாசிப்பதேயில்லை என்று தனியுரிமை கொள்கை வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பயனர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்படும் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

You'r reading பயனர் பற்றிய தகவலுக்கு பணம்: ஃபேஸ்புக்கின் ஸ்டடி செயலி Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை