சிறுவருக்கான மெசஞ்சர் கிட்ஸ் சேவையில் வடிவமைப்பு குறைபாடு காரணமாக குரூப் சாட் என்னும் குழு அரட்டையில் ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமியர், அனுமதிக்கப்படாத பயனர்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தது என்று ஃபேஸ்புக் நிறுவனம் ஒத்துக்கொண்டுள்ளது.
மெசஞ்சர் கிட்ஸ்:
ஃபேஸ்புக் நிறுவனம் 13 வயதுக்கும் குறைவான சிறுவர் சிறுமியருக்கென 2017ம் ஆண்டு மெசஞ்சர் கிட்ஸ் என்ற சேவையை அறிமுகம் செய்தது. இது, வீடியோ சாட் என்னும் காணொளி அரட்டை மற்றும் செய்தி செயலி ஆகும். மெசஞ்சர் கிட்ஸ் மூலம் சிறுவர், சிறுமியர் பெற்றோர் அல்லது காப்பாளர் அனுமதிக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ள இயலும். பெற்றோர் தங்கள் ஃபேஸ்புக் கணக்கினை கொண்டு தங்கள் குழந்தையின் மெசஞ்சர் கிட்ஸ் கணக்கினை நிர்வகிக்க முடியும்.
எதிர்ப்பு:
கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை நல வல்லுநர்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்குக்கு மெசஞ்சர் கிட்ஸ் செயலியை தொடர்ந்து நடத்த வேண்டாமென்று திறந்த மடல் எழுதியிருந்தனர். சமூக ஊடக பயன்பாடு பதின்ம வயதினரின் நல வாழ்வை பாதிப்பது குறித்த கவலை பெருகியிருக்கிற இக்காலகட்டத்தில் பள்ளிக் குழந்தைகளை ஃபேஸ்புக் தயாரிப்பை பயன்படுத்த ஊக்குவிப்பது பொறுப்பற்ற செயலாகும் என்று அக்கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.
குறைபாடு:
சிறுவருக்கான மெசஞ்சர் கிட்ஸின் குரூப் சாட் என்னும் குழு அரட்டையில் குறைபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக பெற்றோர் அனுமதிக்காக பயனர்களிடமும் சிறுவர் சிறுமியர் குழு அரட்டையில் கலந்து கொள்ள நேர்ந்தது. மெசஞ்சர் கிட்ஸை திரும்ப பெறுமாறு வல்லுநர்கள் கோரிக்கை விடுத்ததை கணக்கில் கொள்ளாமல், 'தொழில்நுட்ப கோளாறு' என்று ஃபேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.
சிறு எண்ணிக்கையிலான அரட்டை குழுக்கள் தொழில் நுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளன. குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட குழுக்கள் முடக்கப்பட்டுள்ளன. தொழில் நுட்ப கோளாறு குறித்து பாதிக்கப்பட்ட குழுக்களில் உள்ள பயனர்களின் பெற்றோருக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறுவர் சிறுமியர் வேடிக்கையான மீம்ஸ்களை பதிவேற்றம் செய்வதற்கான எல்ஓஎல் (LOL) என்னும் புதிய செயலியை கடந்த பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் அறிமுகம் செய்வதாக இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வல்லுநர்களின் எதிர்ப்பின்பேரில் அதை கைவிட்டுவிட்டு மெசஞ்சர் கிட்ஸ் சேவையில் முழு கவனத்தை செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.