ஜூன் மாதம் முடிந்த காலாண்டு கணக்குப்படி, இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் முதலிடத்தை ரிலையன்ஸ் ஜியோ பிடித்துள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் இரண்டாமிடத்துக்கு இறங்கியுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை ஆரம்பித்தார். 36 பில்லியன் டாலர் (ஏறக்குறைய 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்) தொகையை செலவிட்டு, நிறுவனத்தை முதலிடத்திற்கு உயர்த்தியுள்ளார்.
முகேஷின் கட்டண குறைப்புக்கு ஈடு கொடுக்க இயலாமல் சில தொலைதொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. சில நிறுவனங்கள் ஒன்றாய் இணைந்து கொண்டன. உள்நாட்டு நிறுவனமான வோடஃபோன் ஐடியா செல்லுலார் நிறுவனத்துடன் இணைந்தது.
கடந்த மே மாதம் ரிலையன்ஸ் ஜியோ இரண்டாமிடத்தில் இருந்தது. தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் அறிக்கைபடி, அதன் பங்கு சந்தை மதிப்பு 27.8 விழுக்காடு அதிகரித்தது. வோடஃபோன் ஐடியாவின் பங்கு மதிப்பு 33.4 விழுக்காடாகவும், பார்த்தி ஏர்டெல் பங்கு மதிப்பு 27.6 விழுக்காடாகவும் இருந்தது.
ஜூன் மாதம் முடிந்த காலாண்டின்படி, ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 33 கோடியே 13 லட்சமாக உயர்ந்துள்ளது. 33 கோடியே 41 லட்சமாக இருந்த வோடஃபோன் ஐடியாவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 32 கோடியாக குறைந்துள்ளது.
அடுத்த ஆண்டு 5ஜி அலைக்கற்றையை வணிகரீதியாக இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு நிறுவனங்கள் முனைந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் ஜியோவின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு முக்கியத்துவம் வாய்ந்தது.