நாம் பயன்படுத்தும் மேசை கணினி (டெஸ்க் டாப் - பிசி) மற்றும் மடிக் கணினி (லேப்டாப்) ஆகியவற்றிலிருந்தும் வாட்ஸ்அப் மூலம் இன்னொருவருடன் காணொலி காட்சி (வீடியோ கால்) மூலம் உரையாடலாம். அதற்கு வாட்ஸ்அப் செயலியை டவுண்லோடு செய்வது அவசியம். வாட்ஸ்அப் வெப் என்பது வாட்ஸ்அப்பின் பிரௌசர் வடிவ பயன்பாட்டுக்கானது வாட்ஸ்அப் வெப் மூலம் குரல் (audio) மற்றும் காட்சி (video) அழைப்புகளை செய்ய இயலாது. வாட்ஸ்அப்பில் கம்ப்யூட்டரிலிருந்து குழு அழைப்பு செய்ய முடியாது. ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளும் வசதியே தற்போதுள்ளது. செங்குத்து (போர்ரைட்) மற்றும் கிடைமட்டம் (லேண்ட்ஸ்கேப்) இரண்டு வகையிலும் வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம். மேசைக் கணினியில் உள்ள செயலி, உங்கள் ஸ்மார்ட்போனிலுள்ள செயலியின் விரிவாக்கம் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
உங்கள் ஸ்மார்ட்போன், கணினி அல்லது லேப்டாப் இரண்டிலும் வாட்ஸ்அப் செயலி இருக்கவேண்டும். ஸ்மார்ட்போனில் ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியை வைத்திருக்கும் பயனர்களே கணினியில் அதை பயன்படுத்த முடியும். கணினியில் வாட்ஸ்அப் செயலி இயங்குவதால் அதில் வரும் அறிவிக்கைகள், குறுக்கு வழிகள் (கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்) ஆகியவற்றை கவனித்து செயல்படவேண்டும். கணினி அல்லது லேப்டாப் மூலம் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பினை செய்யும்போது கணினி மற்றும் ஸ்மார்ட்போன் இரண்டிற்கும் இணைய இணைப்பு (டேட்டா கனெக்சன்) இருக்கவேண்டும். கணினி மூலம் வீடியோ அழைப்பினை செய்யும்போது ஹெட்போன்களை பயன்படுத்துவது நல்லது. ஸ்பீக்கர், மைக் தனியாக பயன்படுத்தினால் எதிரொலி மூலம் அழைப்பின் தரம் பாதிக்கப்படலாம்.