அந்த மாதிரி பெருசுங்க மெசேஜ் அனுப்ப தடை: இன்ஸ்டாகிராம்

by SAM ASIR, Mar 17, 2021, 08:48 AM IST

புகைப்பட பகிர்வு சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் பயனர்களுக்குப் புதிய பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகம் செய்ய இருக்கிறது. தவறான நோக்கம் கொண்ட பெரியவர்களால் பதின்பருவ (டீன்ஏஜ்) பயனர்கள் தொந்தரவுக்கு உள்ளாவதை தடுக்க இவ்வழிமுறைகள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் சில நாடுகளில் பயன்பாட்டுக்கு வர இருக்கும் இந்த வழிமுறைகள் கூடிய விரைவில் உலக அளவிலான பயன்பாட்டுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடராத பதின்பருவ பயனர் ஒருவருக்கு வயது வந்த பெரியவரான பயனர் ஒருவர் மெசேஜ் அனுப்ப முயன்றால், 'நேரடி செய்தி (DM டைரக்ட் மெசேஜிங்) தெரிவு இல்லை' என்ற எச்சரிக்கை கிடைக்கும். 'சந்தேகத்திற்கிடமான' பெரியவர்களுக்கு பதின்பருவ பயனர் மெசேஜ் அனுப்ப முயன்றாலும் பாதுகாப்பு எச்சரிக்கை கிடைக்கும்.

18 வயதுக்குக் குறைவான பயனர்களுக்கு அதிக எண்ணிக்கையில் நட்பு கோரிக்கை அல்லது மெசேஜ் கோரிக்கை அனுப்புவர்கள் சந்தேக பட்டியலில் இடம் பெறுவர் என்றும் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளின்படி டீன்ஏஜ் பயனர்கள், தங்களுக்கு மெசேஜ் அனுப்பும் பெரியவர்களை குறித்து இன்ஸ்டாகிராமுக்கு புகார் செய்யலாம் அல்லது அவர்களை தடை (பிளாக்) செய்யலாம்.

புகைப்படங்கள், வீடியோக்கள் மற்ற தகவல்களை பகிர்வது குறித்து கவனமாக இருக்கும்படிக்கும், வரும் எல்லா செய்திகளுக்கும் பதில் தர வேண்டுமென்று நினைக்கவேண்டாம் என்றும் டீன்ஏஜ் பயனர்கள் பாதுகாப்பு ஏற்பாடு நினைவுறுத்தும். பல பயனர்கள் தங்கள் வயது குறித்த உண்மையான விவரங்களை குறிப்பிட்டாலும் இளம்வயதினர் பிறந்த தேதி குறித்து பொய்யான தகவல்களை பதிவிடுவதாகவும், வயதுக்கேற்ற அம்சங்களை நடைமுறைப்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் இயந்திர கற்றல் (மிஷின் லேர்னிங்) தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாகவும் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

You'r reading அந்த மாதிரி பெருசுங்க மெசேஜ் அனுப்ப தடை: இன்ஸ்டாகிராம் Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை