சாம்சங் நிறுவனம் இந்தியாவிலுள்ள பயனர்கள் பயன்படுத்தும்படியாய் கேலக்ஸி நோட் 9 போனுக்கான ஆண்ட்ராய்டு 9 பையை அடிப்படையாகக் கொண்ட ஒன் யூஐ பீட்டா (One UI beta) இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய பயனர் இடைமுகமான யூஐ பீட்டாவை பெற்றுக்கொள்ள விரும்பும் பயனர்கள் அதற்காக பதிவு செய்து கொள்ள வேண்டும்.சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தனது கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஆகிய போன்களுக்கான ஒன் யூஐ பீட்டாவை வெளியிட்டது. முதன்முறையாக வரப்போகும் மென்பொருளை அது பொது தளத்தில் அறிமுகம் செய்துள்ளது.
நோட் 9 போனுக்கான பயனர் இடைமுகமான யூஐ பீட்டா தற்போது ஜெர்மனி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலுள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதற்கு பதிவு செய்வதற்கான இணைப்பு சாம்சங் உறுப்பினர்கள் செயலியில் (Members App) உள்ளது. புதிய பயனர் இடைமுகமான ஒன் யூஐ பீட்டாவை பெறுவதற்கு பதிவு செய்ய விரும்புவோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து சாம்சங் உறுப்பினர்கள் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதை தங்கள் போனில் நிறுவிய பிறகு பீட்டாவுக்கான பொத்தானை அழுத்தவேண்டும். பின்னர் போனிலுள்ள செட்டிங் (Setting Panel) பகுதியில் மென்பொருள் மேம்படுத்தலுக்கான பொத்தானை அழுத்த வேண்டும்.
புதிய ஒன் யூஐ, போட்டோ எடிட்டர் ப்ரோ போன்ற படத்தொகுப்பு கருவிகள் ஒருங்கிணைக்கப்பட்டது என்பது சிறப்பாகும்.
முதன்முறை சாம்சங் டச்விஷ் என்ற பெயரில் பயனர் இடைமுகத்தை அறிமுகம் செய்திருந்தது. தற்போது அதில் பல்வேறு மாற்றங்களை செய்து ஒன் யூஐ என்ற பயனர் இடைமுகத்தை அறிமுகம் செய்துள்ளது.