குழந்தைகளின் ஆபாச படங்களுக்கு தங்கள் தளத்தில் இடம் கிடையாது என்றும் அவற்றை குறித்து ஏனைய பயனர்கள் புகார் கொடுத்தால் தொடர்புடைய பயனர் கணக்கு முடக்கப்படும் என்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
"ஒரு பயனர் மற்றொரு பயனருடன் பகிரும் செய்திகளை நம்மால் பார்க்க இயலாவிட்டாலும், ஏனைய பயனர்களிடமிருந்து குற்றச்சாட்டு வந்தால் தொடர்புடைய கணக்குகளை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். குழந்தைகளின் ஆபாச படங்கள் பகிரப்படுவது குறித்து சட்டப்பூர்வமான கோரிக்கைகள் வருமென்றால் வாட்ஸ் அப் அக்குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட இயன்ற ஒத்துழைப்பு வழங்கும்," என்றும் நிறுவனம் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான பதிவுகளை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் தானியங்கு முறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்கள் குறித்து மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. இது குறித்த வழக்கு ஒன்றில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகுர் மற்றும் யூ.யூ. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விஷயத்தில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு கருத்தினை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், குழந்தைகளின் ஆபாச படங்கள், பாலியல் வன்முறை காட்சிகள் ஆகியவை கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும் என்று கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்துமே ஒத்துக்கொண்டுள்ளன.
இந்த விஷயத்தை கையாளுவது குறித்து இந்திய அரசின் கோரிக்கையை கருத்தில் கொண்டு அனைத்து நிறுவனங்களுக்குமான நிலையான செயல்பாட்டு முறை வகுக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.