உங்க ஸ்மார்ட்போனில் தீங்கு விளைவிக்கும் செயலி உள்ளதா? செக் பண்ணுங்க!

Is your smartphone a harmful processor? Check it out!

by SAM ASIR, Dec 9, 2018, 13:49 PM IST

பயனர்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய 22 செயலிகளை கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து அழித்துள்ளது.

பிளே ஸ்டோர் (Play Store) மூலம் தரவிறக்கம் செய்யப்பட்டிருந்தால், அத்தகைய போன்களிலிருந்தும் அந்தச் செயலிகள் கூகுள் மூலம் நீக்கப்பட முடியும். ஆனால், அவ்வாறு அனைத்துச் செயலிகளும் பயனர்களின் போன்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளனவா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்தச் செயலிகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கக்கூடியவை.

கணினி மற்றும் மொபைல் போன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் போன்ற செயலிகள் இருப்பதாக ஸோபாஸ் (Sophos) என்ற இணையவெளி பாதுகாப்பு நிறுவனம், வலை பதிவொன்றில் கூறியிருந்தது. இவை தாம் நிறுவப்பட்டிருக்கும் போன்களில் மறைவாக செயல்பட்டு அநேக ஏமாற்று விளம்பரங்களுக்கு துணை போவதாக அந்நிறுவனம் கூறியிருந்தது.

பயனரின் போனிலிருந்து மோசடியாக வேண்டுகோள்களை அனுப்பி, போலி சொடுக்குகள் (clicks) மூலம் விளம்பர நிறுவனங்கள் பொருளீட்ட இவை உதவி வந்துள்ளதாக கூறப்படுகிறது. பயனர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆண்ட்ராய்டு சமுதாயத்திற்கே இவை கேடு விளைவிக்கக்கூடியவை என்று அஞ்சப்படுகிறது.
இந்தச் செயலிகள் ஸ்மார்ட் போனின் பின்புலத்தில் தொடர்ந்து செயல்பட்டு சர்வர்கள் என்னும் வழங்கிகளுடன் இடையறா தொடர்பில் இருந்து வருவதால் போனின் மின்கல ஆற்றல் (பேட்டரி) விரைவில் தீர்ந்துபோவதுடன், டேட்டா என்னும் இணைய தொடர்புக்கான தரவு அதிகமாக செலவாகிவிடும். சர்வர்களின் கட்டளைக்கிணங்க இவை தீங்கு விளைவிக்கக்கூடிய மென்பொருள்களையும் நிறுவி விடும்.

கீழ்க்காணும் ஆண்ட்ராய்டு செயலிகள் ஆபத்தானவை என்று ஸோபாஸ் நிறுவனம் கூறியுள்ளது. இவை உங்கள் போனில் உள்ளதா என்று ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.
Sparkle FlashLight, Snake Attack, Math Solver, ShapeSorter, Tak A Trip, Magnifeye, Join Up, Zombie Killer, Space Rocket, Neon Pong, Just Flashlight, Table Soccer, Cliff Diver, Box Stack, Jelly Slice, AK Blackjack, Color Tiles, Animal Match, Roulette Mania, HexaFall, HexaBlocks, PairZap

பிரபலமான செயலிகள் மூலம் முறைகேடுகள் நடப்பது இது முதல்முறையல்ல; சில வாரங்களுக்கு முன்பும் Clean Master உள்ளிட்ட வேறு பல செயலிகள் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும்வண்ணம் செயல்பட்டு வந்த தகவல் தெரிய வந்தது.

You'r reading உங்க ஸ்மார்ட்போனில் தீங்கு விளைவிக்கும் செயலி உள்ளதா? செக் பண்ணுங்க! Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை