தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் கிராமத்தில் கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்த சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களது ஒவ்வொருவர் பெயரிலும் இங்கு வங்கிக் கணக்கு உள்ளது. பலர் லட்சக்கணக்கான ரூபாயை இந்த சங்கத்தில் டெபாசிட் செய்துள்ளனர்.இந்த நிலையில் இங்கு பணியாற்றும் சிலர் போலியான கையெழுத்தைப் போட்டு உறுப்பினர்களின் பணத்தை எடுத்துக் கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது.
நேற்று பல லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருந்த ஒருவர் தனது பணத்தை எடுக்கச் சென்றபோது அத்தனை பணமும் ஏற்கனவே எடுக்கப்பட்டதாக வங்கி ஊழியர் தெரிவித்தார்.கணினியிலும் அவரது கணக்கில் மிகக் குறைந்த அளவு பணமே இருப்பு உள்ளதாகக் காட்டப்பட்டது. தனது பணம் ஸ்வாஹா செய்யப்பட்டதை உணர்ந்த அவர் மற்ற உறுப்பினர்களுக்கும் இதுபற்றி தெரிவித்தார்.
இதையடுத்து காலை முதலே ஏராளமானோர் இந்த சங்கத்திற்கு வந்து தங்களது கணக்குகளைச் சரிபார்த்தனர். கிட்டத்தட்ட அனைவரது கணக்கிலிருந்தும் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. நேரம் செல்லச்செல்ல வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவதை அறிந்த சங்க ஊழியர்கள் அதை பூட்டிவிட்டுத் தப்பிவிட்டனர்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கோடி அளவில் உறுப்பினர்களின் பணம் மோசடி செய்யப்பட்டதாக வந்த தகவல் ரவணசமுத்திரம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.