திணறுகிறது திருப்பூர்... பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு..!

Tirupur knitting industries paralysed by Korana

by Balaji, Sep 29, 2020, 15:31 PM IST

சீனாவில் தனது ஆட்டத்தைத் தொடங்கிய கொரோனா உலகம் முழுக்க பரவி பெரும் பாதிப்பை ஏற் படுத்திவிட்டது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பொதுமக்களோடு தொழில் துறையினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நகரங்களில் ஒன்றான திருப்பூரில் கொரோனா தொழில் ரீதியாக மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜவுளித் தொழில், குறிப்பாக உள்ளாடைகள் தயாரிப்பை மையமாகக் கொண்ட இந்த நகரத்தில் கொரோனாவால் ஏற்றுமதி வாய்ப்புகள் அடியோடு மாயமாகிவிட்டது.
திருப்பூரிலிருந்து இங்கிலாந்து, ஸ்பெயின், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகமான அளவில் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்நாடுகள் திருப்பூரிலிருந்து ஆடைகள் வாங்குவதைக் குறைத்து விட்டன.ஐரோப்பிய ஜவுளி பிராண்டுகளான பிரிமார்க், எஸ் ஆலிவர், டாம் டெய்லர் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட திருப்பூர் ஆர்டர்களைக் குறைத்துள்ளன.ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்துள்ளதோடு, ஏற்கெனவே ஏற்றுமதி செய்த அடைகளுக்கான பாக்கித் தொகையும் இன்னும் வந்துசேரவில்லை. கடந்த எட்டு மாதங்களில் மட்டும் ஏற்றுமதி பாக்கித் தொகை ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் இருப்பதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள கொரோனா பாதிப்பால் திருப்பூரில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி பொருட்கள் தேக்கமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடியைப் பின்னலாடை தொழில் ஏற்றுமதி மூலம் வருமானம் ஈட்டித்தந்த திருப்பூர் மாநகரம் முடங்கிப் போய் இருக்கிறது. இங்குள்ள 2 லட்சம் வடமாநில தொழிலாளர் உள்பட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி அலைவதைக் காணமுடிகிறது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள ஒரு வருடமாகும் என உற்பத்தியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த மார்ச் மாத ஆரம்பத்திலேயே திருப்பூரில் இருந்து சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனாலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக,ஐரோப்பியா, ஸ்திரேலேயியா, அமெரிக்கா எனப் பல நாட்டுத் துறைமுகங்களிலேயே அவை தேங்கிக் கிடக்கின்றன. இதனால் அதற்கான தொகையும் உற்பத்தியாளர்களுக்குக் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது., தற்போது குறைந்த பணியாளர்களோடு உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.

தற்போதைய சூழலில், உலகம் முழுவதும் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, செலவிடப்படுகிறது. ஆடைகள் நுகர்வு என்பது அடியோடு பாதிக்கப்பட்டால், வேலைவாய்ப்பின்மை போன்ற மறைமுக பாதிப்புகள் உருவாகும்.இதனால் திருப்பூரில் உள்ள , தொழில் நிறுவனங்கள் வங்கியில் பெற்ற கடன்களுக்கான வட்டியைக் குறைப்பதோடு, அரசும் மானிய சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல், புதிய மூலதன கடன்களை வழங்குவதன் மூலம் பின்னலாடை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க வழிவகை ஏற்படும் என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

More Tiruppur News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை