திருப்பூரில் 90 வயது அரசமரம் வேறிடத்திற்கு டிரான்ஸ்பர்..

திருப்பூரில் 90 வயதைக் கடந்து நிற்கும் அரசமரம் அப்படியே வேருடன் பெயர்க்கப்பட்டு வேறு இடத்தில் நடவு செய்யப்பட்டது. மரம் இருந்த இடத்தில் ஊர் மக்கள் மலர் தூவி மரத்தை வழி அனுப்பி வைத்தனர்.திருப்பூர் - வாலிபாளையம் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 90 ஆண்டுகள் பழமையான அரசமரம் உள்ளது. அந்த இடத்தில் சமுதாயக் கூடம் கட்ட வேண்டி அங்கு இருந்த பழமையான மரத்தை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது.

திருப்பூரைச் சேர்ந்த இளங்கோ என்ற இயற்கை ஆர்வலர், திருப்பூர் - காளம் பாளையம் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாநகராட்சி இடத்தில் பழமையான அரச மரத்தை அகற்ற இருப்பதை அறிந்த அவர், கிரீன் & கிளின் என்ற அமைப்பின் மூலம் அந்த அரசமரத்தை மறு நடவு செய்ய மாநகராட்சியில் அனுமதி பெற்றார். அனுமதி கிடைத்தை தொடர்ந்து, வாலி பாளையம் பகுதியிலிருந்து மரத்தை அகற்றும் பணி ஆரம்பித்தது. இந்த பழமையான அரச மரம் 80 அடி உயரம் , 15 டன் எடை கொண்டதாகும். இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் அந்த மரம் வேருடன் பெயர்க்கப்பட்டு, ராட்சத டிரக் வாகனத்தில் ஏற்றப்பட்டது.

முன்னதாக அரசமரத்தின் கிளைகள் மட்டும் வெட்டப்பட்டு வேர்கள் சேதமில்லாமலும், சுற்றிலும் குழி தோண்டப்பட்டு, மரத்தின் காயமடைந்த பகுதிகள் சாணம் கொண்டு மெழுகப்பட்டது. ராட்சத டிரக்கில் எடுத்துச் செல்லப்பட்ட அரச மரத்திற்கு அப்பகுதி மக்கள், பூஜை செய்து மலர் தூவி விடை கொடுத்தனர். டிரக் மூலம் காளம்பாளையம் பறவைகள் சரணாலயம் அமையவுள்ள பகுதிக்கு அரசமரம் கொண்டு வரப்பட்டது. அங்கு நம்மாழ்வார் ஃபார்முலாவின் படி கரும்பு சர்க்கரை, கோமியம், சாணம் ஆகியவை கலந்த அமிர்த கரைசல், வேப்ப புண்ணாக்கு கரைசல், தென்னை நார் ஆகியவை ஒரு வாரத்திற்கு முன்னதாக போடப்பட்டிருந்த குழியில் கிரேன்களின் உதவியுடன் மரம் வெற்றிகரமாக மறுநடவு செய்யப்பட்டது. பின், மீண்டும் அமிர்த கரைசல், வேப்ப புண்ணாக்கு கரைசல், தென்னை நார் ஆகியவை இடப்பட்டு மண் மூலம் மூடப்பட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :