திணறுகிறது திருப்பூர் : பின்னோக்கி செல்லும் பின்னலாடை தொழில்

தொடர்ந்து நீடிக்கும் நூல் விலையேற்றத்தால் திருப்பூரின் பின்னலாடை தொழில் பின்னடைவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

by Balaji, Feb 13, 2021, 19:18 PM IST

டாலர் சிட்டி, மினி ஜப்பான் என்றெல்லாம் பெருமையுடன் அழைக்கப்படும் தொழில் நகரம் திருப்பூர். உலக அளவில் பின்னலாடை தொழிலில் பிரபலமான விரைவில் அந்தப் பெருமையை இழந்து விடும் அபாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.ஜிஎஸ்டி வரி பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவற்றின் காரணமாக நலிவடைந்த தொழில் தற்போது நூல் விலையேற்றத்தின் காரணமாக மீண்டும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. கொரானா ஊரடங்கால் பல மாதங்கள் மூடப்பட்டிருந்த பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் தற்போது படிப்படியாகத் திறக்கப்பட்டு உற்பத்தியைத் துவங்கி வருகிறது .

ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து ஆர்டர்கள் வந்ததால் பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் வேலையைத் தொடங்கின. பேரிடர் கால பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்த நிறுவனங்கள் பின்னலாடை தயாரிப்பில் தீவிர முனைப்புடன் செயல்படத் தொடங்கின. தங்கு தடையின்றி ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ஆர்டர்களை வரவே ஆடைகளைத் தயாரித்துத் தரத் தொடங்கிய நிலையில்தான் நூல் விலை ஏற்றம் பேரிடியாக வந்தது.

2020 நவம்பர் டிசம்பர் மாதங்களில் ஒரு கிலோ 190 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்ட பின்னலாடைக்கான நூல்கள் முப்பது ரூபாய் வரை வழிந்து கிலோவிற்கு 220 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. ஏற்கனவே ஆர்டர்களை பேசி ஒப்பந்தம் செய்தபின் ஒப்பந்தம் செய்துகொண்டு பணிகளைத் தொடங்கிய பின்னலாடை நிறுவனங்கள் இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்த திடீர் நூல் விலை உயர்வு வெளிநாடுகளிலிருந்து பின்னலாடை தயாரிக்க ஆயத்தமாக உள்ள நிறுவனங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. ஒப்பந்தப்படி பேசிய விலைக்கே பணிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்ற நிலையில் துளி கூட லாபம் இல்லாமல் ஆடைகளை உற்பத்தி செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன இந்த நிறுவனங்கள்.இதனால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய அதிர்ச்சியில் பின்னலாடை நடத்துவோர் உள்ளனர்.

இது ஒருபுறமிருக்கக் கணக்கின்றி வெளிநாடுகளுக்கு நூல் ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஒரு தரப்பினரும் இந்த நூல் விலையேற்றம் திட்டமிட்டு சிலரால் உருவாக்கப்பட்டது என்றும் நூல்களைப் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அதன் மூலம் விலையை உயர்த்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கச் சிலர் திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாகவே நூல் விலை உயர்வாக இன்னொரு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.செயற்கையான இந்த தட்டுப்பாட்டைக் கண்டுபிடித்தது நூல் ஏற்றுமதியை முறைப்படுத்த வேண்டும் என்பது பின்னலாடை நிறுவன உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

அதிலும் குறிப்பாக உள் நாட்டுக்குத் தேவையான நூலை வைத்துக் கொண்டு மீதத்தை மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமெனப் பின்னலாடை தொழில் நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். வெளிநாடுகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்குக் கூட நூல் ஏற்றுமதி செய்வதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்பதும் இவர்களின் வாதமாக உள்ளது.பின்னலாடை தயாரிப்பைச் சார்ந்துள்ள பங்களாதேஷ் வியட்நாம் சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை விடக் குறைந்த விலைக்குப் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நடவடிக்கையினால் போட்டி நாடுகளுக்குச் சவால் விடுகின்ற நிலையில் பின்னலாடைகளை தங்களால் உற்பத்தி செய்ய நூல் விலையேற்றம் பெரும் தடையாக உள்ளது. எனவே இதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பின்னலாடை நிறுவன பணிகள் பதுக்கப்படும் நூல் ஏற்றுமதி செய்யப்படும் நூல் போன்றவற்றின் காரணமாகத் தேவையான நூல் கிடைக்காததால் சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது. இது திருப்பூரின் வளர்ச்சியில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.எனவே மத்திய மாநில அரசுகள் இதில் உடனடியாக தலையிட்டு பின்னலாடை தொழிலை நெருக்கடியில் இருந்து மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பின்னலாடை நிறுவனங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

You'r reading திணறுகிறது திருப்பூர் : பின்னோக்கி செல்லும் பின்னலாடை தொழில் Originally posted on The Subeditor Tamil

More Tiruppur News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை