தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை ஒவ்வொருவராக எழுப்பி சயனைடு விஷம் கலந்த பாலை கொடுத்த சிவகாமி.. குடும்பமே உயிரிழந்த பரிதாபம்..

by எஸ். எம். கணபதி, Dec 14, 2019, 14:04 PM IST
Share Tweet Whatsapp

விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டில் சொத்தை இழந்து விரக்தியடைந்த நகை தொழிலாளி ஒருவர், தனது மனைவி மற்றும் 3 பெண்குழந்தைகளுடன் சயனைடு தின்று தற்கொலை செய்துள்ளார்.

விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகரில் வசித்து வந்தவர் அருண்(33). இவர் சொந்தமாக நடை பட்டறை வைத்திருந்தார். இவருக்கு சிவகாமி(26) என்ற மனைவியும், பிரியதர்ஷினி(6), யுவஸ்ரீ(3) மற்றும் பாரதி என்ற 4 மாதக்குழந்தையும் இருந்தனர். நகை செய்யும் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்ததால், 3 வருடங்களுக்கு முன்பு விழுப்புரம் மீனாட்சி நகரில் ரூ.50 லட்சம் வரை செலவு செய்து புது வீடு கட்டி குடியேறினார்.

அதற்கு பிறகு அவருக்கு தொழிலில் வருமானம் குறைந்தது. இதனால், தனது நண்பர்களிடம் கடன் வாங்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் கடன் தொகை அதிகமாகி விட்டது. அப்போது திருட்டு லாட்டரிச் சீட்டு வாங்கிப் பழகினார். தினமும் அதிலேயே பாதிப் பணத்தை விட்டார். என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்டம் அடித்து லாட்டரியில் பெரிய தொகை விழுந்தால் கடன் முழுவதையும் அடைத்து விடலாம் என்ற தவறான நம்பிக்கையில் விழுந்தார்.

விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரிச் சீட்டுகளை திருட்டுத்தனமாக விற்று வந்துள்ளனர். காவல் துறையினருக்கு லஞ்சம் கொடுத்து அவர்களின் ஆசியுடன் நடப்பதால், திருட்டு லாட்டரி விற்பவர்கள் துணிச்சலாக விற்றுள்ளனர். லாட்டரி மோகத்திற்கு சிக்கியவர்களும் பயமின்றி வாங்கியிருக்கின்றனர். இந்த லாட்டரியால் அருணுக்கு அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. அவரை மேலும் மேலும் கடன்காரனாகவே ஆக்கியது.

அதற்கு பிறகு வீட்டை விற்று கடனை அடைத்தார். சொந்த நகைப் பட்டறையை மூடி விட்டு, நண்பர்களின் பட்டறையில் வேலை பார்த்தார். மேலும், விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில், அவருக்கு லாட்டரி மோகம் போகவில்லை. இதனால் மீண்டும் கடன் வாங்கி லாட்டரியில் பணத்தை விட்டார்.

இதனால், மீண்டும் கடனாளியானதுடன், 3 பெண் குழந்தைகளை எப்படி படிக்க வைத்து திருமணம் செய்து வைக்கப் போகிறோம் என்ற பயமும் அருணை வாட்டி வதைத்தது.

இதனால், வாழ்க்கை வெறுத்து போய் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள துணிந்தார். இதை சிவகாமியிடம் சொல்லவே அவரும் வாழ்க்கையை வெறுத்தார். தனது கணவர் மட்டும் தன்னை விட்டு போய் விடக் கூடாது என்ற எண்ணத்தில் அவரும் தற்கொலைக்கு சம்மதித்தார். இருவரும் தற்கொலை செய்துகொண்டால் குழந்தைகளை ஆதரவற்று நிர்கதியாகி விடும் என்று நினைத்த தம்பதி, அந்த குழந்தைகளையும் கொன்று விட தீர்மானித்தனர்.

இதன்பின், அருண் நேற்று முன்தினம்(டிச.12) வேலைக்கு போய் விட்டு இரவு 9.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார். நகை செய்வதற்காக பயன்படுத்தப்படும் சயனைடு பவுடரை ஒரு டம்ளர் பாலில் கலந்தனர். தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை ஒவ்வொருவராக எழுப்பிய சிவகாமி, சயனைடு விஷம் கலந்த பாலை கொடுத்துள்ளார். சில நிமிடங்களில் 3 குழந்தைகளும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி விழுந்தனர். இதனை அருண் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

பின்னர் அருண், சிவகாமி இருவரும் தற்கொலை முடிவு எடுத்ததற்கான காரணத்தை உருக்கமாக பேசி, அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அருண் அதனை தன்னுடைய நண்பர்கள் குழுவில் அதை பகிர்ந்தார். பின்னர், சயனைடு கலந்த பாலை அருணும், சிவகாமியும் குடித்து விட்டனர்.

இரவு 11 மணியளவில் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த அருணின் நண்பர்கள், அவரது வீட்டுக்கு பதறியடித்தபடி சென்றனர். ஆனால், 3 குழந்தைகள் மற்றும் மனைவி சிவகாமியை கட்டியணைத்தபடி அருண் மயங்கிக் கிடந்தார். எல்லோரும் வாயில் நுரைதள்ளி கிடந்தனர்.

தகவலின்பேரில் போலீசாரும் அங்கு விரைந்து சென்று 5 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதக டாக்டர்கள் தெரவித்தனர்.
அருணின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து 5 பேரின் உடலையும் பார்த்து கதறினர். 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
லாட்டரியால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பின்னால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக திருட்டு லாட்டரிகாரர்களை தேடினர். ஆனால், அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.


Leave a reply