பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக இந்து மதத்தைச் சார்ந்த பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள குவம்பர் மாவட்டத்தைச் சேர்ந்தப் பெண் சுமன் குமாரி. இந்து மதத்தைச் சேர்ந்த இவர் பாகிஸ்தானின் ஐதராபாத் நகரில் தனது இளநிலை வழக்கறிஞர் படிப்பையும், கராச்சியில் முதுநிலை வழக்கறிஞர் படிப்பையும் முடித்து பட்டம் பெற்றிருந்தார். பின்னர் தனியார் சட்ட சேவை நிறுவனம் ஒன்றில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் சுமன் குமாரி.
பணிகளுக்கு இடையில் நீதிபதி தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் நடந்த நீதிபதி தேர்வை எழுதியவர் அந்த தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றார். இதனை அடுத்து மாவட்ட சிவில் நீதிபதியாக தற்போது சுமன் குமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனது சொந்த மாவட்டத்திலேயே நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
மகள் நீதிபதியாக உள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுமான் குமாரி தந்தை பவன் குமார், ``சிறுபான்மை மதத்தில் இருந்து இந்தப் பதவிக்கு வருவது கடினமான காரியம். அதை என் மகள் சாத்தியமாக்கியுள்ளார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நீதி தவறாமல் சுமன் நேர்மையுடன் பணியாற்றுவாள் என நினைக்கிறேன். அவள் சொந்த மாவட்டத்திலேயே பணி புரிந்து ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என ஆசைப்பட்டேன். தற்போது என் ஆசை நிறைவேறி உள்ளது" என்று பெருமிதமாக கூறியுள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தானில் இந்து மதத்தை சார்ந்த ராணா பகவான்தாஸ் தலைமை நீதிபதியாக 2005 முதல் 2007 வரை பணியாற்றியுள்ளார். ஆனால் இந்து மதத்தைச் சார்ந்த பெண் பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. இதனால் சுமன் குமாரி குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.