தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியாக, இலங்கை முழுவதும் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்துவ தேவாலயங்களை குறிவைத்து தீவிரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக மாறி தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். மேலும் அதற்கடுத்த தினங்களிலும் அந்நாட்டில் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தினர். இந்த தாக்குதல்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர்.
இந்த நிலையில் தீவிரவாதிகள் நடமாட்டம் இன்னும் இருப்பதால், மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக இலங்கை உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து இலங்கை முழுவதும் கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடக்கும் வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. மறுஉத்தரவு வரும்வரை இந்த கூட்டங்களை ரத்து செய்ய கார்டினல் ரஞ்சித் உத்தரவிட்டிருப்பதாக பேராயர் இல்ல செய்தித்தொடர்பாளர் எட்மண்ட் திலகரத்னே தெரிவித்துள்ளார்.