அமெரிக்க விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது, பேஸ்புக், ட்விட்டர் பக்கம் குறித்த தகவல்களை கட்டாயம் தர வேண்டும் என்று அந்நாட்டு அரசு விதிமுறை வகுத்திருக்கிறது.
அமெரிக்காவுக்கு செல்வதற்கான விசா(அனுமதி) பெறுவதற்கு இப்போது ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும். தற்காலிக விசா( Nonimmigrant Visa ) பெறுவதற்கு DS-160 என்ற விண்ணப்பமும், நிரந்தர குடியுரிமை விசா(immigrant Visa) பெறுவதற்கு DS-230 என்ற விண்ணப்பமும் சமர்பிக்க வேண்டும். அங்குள்ள கம்பெனிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் நம்மை வேலைக்கு அமர்த்தும் போது எச்-1பி என்றழைக்கப்படும் தற்காலிக விசாவே வழங்கப்படுகிறது.
சமீபத்தில் இந்த DS-160, DS-230 ஆகிய ஆன்லைன் விண்ணப்பங்களில், விண்ணப்பி்ப்பவர்கள் தங்களுடைய சமூக ஊடக முகவரிகளை அளிக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களின் விவரங்களை தர வேண்டும். அதாவது அவற்றில் நமது பதிவுகள் தேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் அவற்றை அமெரிக்க அரசு கண்காணிக்கும் என தெரிகிறது.
நமது பெயரில் வேறொருவர் ஏதாவது பதிவிட்டு, பிறகு நம்மூர் அரசியல்வாதிகள் போல், ‘அது என் அட்மின் போட்டது’ என்று சமாளிக்கவும் முடியாது. ஏனெனில், அட்மின் வைத்து அந்த ஊடக பக்கங்களை நீங்கள் கையாண்டாலும் அதன் விவரங்களையும் கண்டிப்பாக தெரிவித்தாக வேண்டும்.
ஹெச்1பி விசா சரிவு: கடந்த 2018ம் ஆண்டில் அமெரிக்கா நமது இந்தியர்களுக்கு அளித்துள்ள ஹெச்1 பி விசா எண்ணிக்கை, முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது, 2017ம் ஆண்டில் 3 லட்சத்து 73,400 பேருக்கு ஹெச்1பி விசா அளிக்கப்பட்டது. ஆனால், 2018ம் ஆண்டில் இது 3 லட்சத்து 35,000 ஆக குறைந்துள்ளது. விசா அப்ரூவலும் 93 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக குறைந்திருக்கிறது. டிரெம்ப் அரசு கொண்டு வந்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.