இலங்கை திரையுலகில் கதாநாயகனாக நடிக்கும் வீர்சிங், தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகம் ஆகிறார்.
இலங்கையில் பிரபல நடிகர் வீர்சிங். கடந்த 15 வருடங்களில் 45 படங்களில் நடித்துள்ள இவர் தற்போது முதன்முறையாக ‘அந்த நிமிடம்’ என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்துள்ளார். குழந்தை இயேசு என்பவர் இயக்கியுள்ள ‘அந்த நிமிடம்’ படத்தில் வில்லனாக நடித்துள்ள வீர்சிங்கே, இந்தப் படத்தின் கதைக் கருவையும் கொடுத்தாராம்.
வீர்சிங் கூறுகையில், ‘‘மும்பையில் நடிப்பு பயிற்சிக்கான டிப்ளமோ படிப்பை முடித்து விட்டு இலங்கையில் 15 வருடங்களாக நடித்து வருகிறேன். அங்கே கதாநாயகனாக நடித்தாலும் தமிழில் அந்த நிமிடம் படத்தில் வில்லனாகத்தான் அறிமுகமாகிறேன். இந்தப் படத்தின் கதைக்கருவை ஐந்து வருடங்களாக என் மனதில் போட்டு வைத்திருந்தேன். எனது நண்பரான இயக்குநர் குழந்தை இயேசுவிடம் இதைச் சொன்னதும் இதைப் படமாக்க முடிவு செய்தோம்.
இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகமாக நடக்கின்றன. அதை மையப்படுத்திதான் இந்தப் படத்தின் கதையை உருவாக்கி உள்ளேன்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறும். தமிழில் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை சிறப்பாக செய்வதை மட்டுமே விரும்புகிறேன். நடிகர் ரகுமான் எனது மிக நெருங்கிய நீண்டகால நண்பர். நான் தமிழ் சினிமாவில் நடிப்பதை அறிந்து முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்தார். தமிழில் ரஜினி, விஜய், அஜித் என அனைவரின் படங்களையும் நான் விரும்பி பார்ப்பேன் என்கிறார் வீர்சிங்.