உலகில் ஆபத்தான நாடு பாகிஸ்தான் தான் : அமெரிக்க முன்னாள் அமைச்சர் கருத்து

by எஸ். எம். கணபதி, Sep 4, 2019, 13:31 PM IST

உலகில் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்க முன்னாள் ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மட்டிஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக பணியாற்றி விட்டு, கடந்த ஜனவரியில் விலகியவர் ஜேம்ஸ் மட்டிஸ். இவர் தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை கடந்த 2 நாள் முன்பு வெளியிட்டார்.

அதில், ராணுவ அமைச்சராக தாம் பதவி வகித்த போது ஏற்பட்ட அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், பாகிஸ்தான் நாட்டின் அணுகுமுறைகளை சுட்டிக்காட்டி, உலகிலேயே மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்று கூறியிருக்கிறாா்.

மேலும், பாகிஸ்தான் நாடு, தீவிரவாதிகளுக்கு உதவும் நாடாக உள்ளது. அணு ஆயுதங்களை குவித்து வரும் நாடு, தீவிரவாதிகளின் புகலிடமாக இருப்பது உலகிற்கு மிகவும் ஆபத்தானது. தனது நாட்டில் உள்ள மக்களை இந்தியாவை வெறுக்கும் மக்களாக மாற்றும் வகையில் அதன் செயல்பாடுகள் உள்ளன. இந்தியாவை எதிர்க்கும் அரசு ஆப்கனிஸ்தானில், அமைய வேண்டும் என்றும் அந்த அரசு தமக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் கருதுகிறது.
பாகிஸ்தான் தலைவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை இல்லை.

அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள உறவு, முழுமையாக நம்பும் உறவாக இல்லை. அந்த நாட்டுடன் பிரச்னைகளுக்கு அமெரிக்கா தீர்வு கண்டாலும், இருநாட்டு உறவில் பல வேறுபாடுகளும் உள்ளன என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Leave a reply