உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா தொடர்பைத் துண்டித்துக் கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் 17 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு இந்நோய் பாதித்துள்ளது. அதில் ஒரு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே, சீனா இந்த வைரஸ் பற்றி உலக நாடுகளுக்கு முன்பே சொல்லத் தவறி விட்டது. அதற்கு உலக சுகாதார நிறுவனமும் துணை போய் விட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார். சீனா திட்டமிட்டு இந்த நோயை உலகம் முழுவதும் பரப்பியுள்ளது என்றும் கூறி, உலக சுகாதார நிறுவனத்திற்கான அமெரிக்க நிதியை நிறுத்தப் போவதாகவும் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:உலக சுகாதார நிறுவனத்திற்குச் சீனா ஆண்டுதோறும் 40 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குத்தான் நிதி அளிக்கிறது. அதே சமயம், அமெரிக்கா 450 மில்லியன் டாலர் அளிக்கிறது. அப்படியிருந்தும் அந்த நிறுவனத்தைச் சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இதன் காரணமாக, உலக சுகாதார நிறுவனத்தில் தேவையான, முக்கியமான சீர்திருத்தங்கள் செய்யப்படவில்லை. இதனால் தான், வைரஸ் நோய்ப் பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்காவின் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறோம். இந்த நிறுவனத்திற்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவி இனிமேல், பொதுச் சுகாதார சேவைகளில் ஈடுபடும் மற்ற சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.