ஒரு முறை கொரோனா பாதித்தவர்களுக்கு மீண்டும் கொரோனா வருமா என்பது குறித்துத் தான் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஹாலந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரியவந்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனாவின் கோரதாண்டவம் இன்னும் குறையவில்லை. பல நாடுகளில் மீண்டும் அதே வேகத்தில் நோய் பரவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுதும் இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 59 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இதுவரை 11 லட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இதுவரை 1லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலும் புற்றுநோய், இதயநோய், நுரையீரல் கோளாறு உள்பட மோசமான நோய்களால் அவதிப்படுபவர்களுக்குத் தான் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஒருமுறை நோய் வந்தவர்களுக்கு மீண்டும் வருமா என்பது குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஹாலந்து நாட்டைச் சேர்ந்த பிஎன்ஓ என்ற செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் அக்டோபர் 16 முதல் உலகம் முழுவதிலும் 24 பேருக்கு இதேபோல இரண்டாவது முறையும் கொரோனா பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஹாங்காங்கை சேர்ந்த 33 வயதான ஒருவருக்குத் தான் இரண்டாவது முறையும் நோய் பாதித்தது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இவருக்கு முதலில் நோய் பரவியது. இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இவர் குணமானார். ஆனால் நான்கரை மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இரண்டாவதாக நோய் வந்தபோது எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.
இதேபோல ஹாலந்து நாட்டைச் சேர்ந்த 89 வயதான ஒரு மூதாட்டிக்கு மீண்டும் நோய்ப் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் புற்று நோய்க்காக கீமோதெரப்பி சிகிச்சை சிகிச்சை பெற்று வந்தார். இரண்டாவதாக நோய் பாதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். நோய் மீண்டும் வருகிறதா அல்லது முதலில் பரவிய வைரஸ் நீண்டகாலம் உடலில் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கத் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் மீண்டும் வருவது பீதியை ஏற்படுத்தும் ஒரு விஷயம் தான் என்றாலும், அதனால் அதிக பாதிப்பு இருக்காது என்றே கருதப்படுகிறது.
சிறியம்மை போன்ற நோய்க்கான வைரஸ்கள் மட்டுமே நீண்ட காலம் உடலிலிருந்து நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும். ஆனால் கொரோனா வைரஸ் போன்ற நுரையீரல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் மீண்டும் பரவ வாய்ப்புண்டு என்று கருதப்படுகிறது.பிஎன்ஓ நிறுவனம் ஆய்வு செய்த 19 பேரில் 10 பேரிலும் இரண்டாவதாக நோய் பாதிக்கப்படும்போது முதலில் இருந்ததை விட நோயின் தீவிரம் அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. 5 பேரின் உடல்நிலை மிக மோசமானது. இரண்டாவது முறை நோய் பாதிக்கும்போது வைரசின் தீவிரம் மிக அதிகமாக இருந்திருக்கலாம் என்று இதன் மூலம் தெரியவந்துள்ளது.