நியூசிலாந்தின் அமைச்சராகும் முதல் இந்திய பெண்

by Nishanth, Nov 2, 2020, 11:32 AM IST

நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்ற 41 வயதான பெண் தான் இந்த சாதனையைப் படைத்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் இவர் சென்னையில் தான் பிறந்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூர் என்ற இடத்தை சேர்ந்த ராமன் ராதாகிருஷ்ணன் மற்றும் உஷா தம்பதியரின் மகளாக 1979ல் பிரியங்கா ராதாகிருஷ்ணன் சென்னையில் பிறந்தார். சிங்கப்பூரில் வளர்ந்த இவர், பின்னர் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் இளநிலையும், பின்னர் வளர்ச்சி ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

படிப்பு முடித்த பின்னர் ஆக்லாந்தில் சமூக சேவகராக இந்திய மக்களிடையே செயல்பட்டு வந்தார். 2006ல் இவர் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். 2014ல் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் சார்பில் இவர் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவரால் வெற்றிபெற முடியவில்லை. 2017ல் இவர் எம்பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் 2019ல் பிரியங்கா ராதாகிருஷ்ணன் இன விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் அமைச்சரவையில் இவர் சமூக நலம், இளைஞர் நலம் மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர தொழில் துறையின் இணை அமைச்சர் பொறுப்பும் இவருக்குக் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தில் முந்தைய அமைச்சரவையில் மந்திரியாக இருந்த ஜென்னி செயில்சாவின் தனி உதவியாளராகவும் பிரியங்கா இருந்து வந்தார். மேலும் தொழிலாளர் கட்சி அரசின் இரண்டாவது அமைச்சரவையில் உதவி சபாநாயகர் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 6ம் தேதி இவர் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.

You'r reading நியூசிலாந்தின் அமைச்சராகும் முதல் இந்திய பெண் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை