ஆஸ்திரேலிய தொடரில் இருந்து ரோகித் நீக்கம் எனக்கு ஒண்ணுமே தெரியாது கை கழுவினார் ரவிசாஸ்திரி

by Nishanth, Nov 2, 2020, 11:39 AM IST

ஆஸ்திரேலிய தொடரில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். வீரர்கள் தேர்வில் நான் தலையிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த உடன் இந்திய கிரிக்கெட் அணி நேராக ஆஸ்திரேலியா செல்கிறது.

ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகள், மற்றும் தலா 3 டி20, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. நவம்பர் 27ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. அதற்கு முன்னதாக 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் நவம்பர் 12ம் தேதி இந்திய அணி துபாயிலிருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்கிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அணியில் இடம் பெறும் வீரர்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் துணை கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. தற்போது நல்ல பார்மில் இருக்கும் ரோகித் சர்மா நீக்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே காயத்துடன் உள்ள மாயங்க் அகர்வால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 அணியிலும் இடம் பெற்றுள்ள நிலையில் ரோகித் நீக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

ரோகித் சர்மா நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று இதுவரை யாரும் வெளிப்படையாகக் கூறவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அதற்கு என்ன காரணம் என்பதை விளக்கியுள்ளார். அவர் கூறியது: ரோகித் சர்மாவுக்கு மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று மருத்துவ அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் தேர்வாளர்கள் அவரை அணியில் சேர்க்கவில்லை. மருத்துவக் குழுவில் இருப்பவர்கள் தான் இது குறித்து இறுதி முடிவு எடுக்கின்றனர். அதில் எனக்கு எந்த பங்கும் இல்லை.

மருத்துவக் குழு தேர்வுக் குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின்படி தான் தேர்வாளர்கள் அவர்களது வேலையைச் செய்துள்ளனர். வீரர்கள் தேர்வில் நான் எந்த விதத்திலும் தலையிடவில்லை. தேர்வுக் குழுவிலும் நான் கிடையாது. ரோகித் சர்மாவை அணியில் தேர்வு செய்தால் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான் எனக்குத் தெரியும்.
காயத்தைப் பொருட்படுத்தாமல் விளையாடினால் அது நம்முடைய எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.

கடந்த 1991ல் எனக்கு காயம் இருந்தது. எந்தக் காரணம் கொண்டும் விளையாடக்கூடாது என்று டாக்டர்கள் எனக்கு அறிவுறுத்தினர். ஆனால் அப்போது நான் நல்ல பார்மில் இருந்ததால் பேராசைப் பட்டு தேவையில்லாமல் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவதற்காக சென்றேன். அதன் மூலம் என்னுடைய எதிர்காலமே பாழானது. 5 வருடங்கள் என்னால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலை ரோகித் சர்மாவுக்கும் வரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading ஆஸ்திரேலிய தொடரில் இருந்து ரோகித் நீக்கம் எனக்கு ஒண்ணுமே தெரியாது கை கழுவினார் ரவிசாஸ்திரி Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை