அதிரடிக்குப் பெயர் போனவர் பாகிஸ்தானிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அஃப்ரிடி. நாடு கடந்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு உள்ளனர். சமீபத்தில் அஃப்ரிடி டிவிட்டரில் போட்ட ஒரு பதிவு, அதிரடி பின்னூட்டங்களை பெற்றுள்ளது.
அஃப்ரிடி இரண்டு புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மான்குட்டிக்கு அவர் புட்டியில் பாலூட்டுவது ஒன்று. விக்கெட் எடுப்பதை அஃப்ரிடி கொண்டாடுவதை, அவரது மகள் செய்து காட்டுவதுபோன்று இன்னொரு புகைப்படம். அதனுடன் "அன்பானோருடன் நேரத்தை செலவழிப்பது சிறந்தது. விக்கெட் எடுப்பதை நான் கொண்டாடுவதை என் மகள் செய்து காட்டுவதை பார்க்கும்போது ஆனந்தமாக உணர்கிறேன். அதேநேரம், விலங்குகளின் மீது அன்பு காட்டவும் மறக்கவில்லை. அவை நம் அன்புக்கு உரித்தானவை" என்றும் அவர் டிவிட் செய்திருந்தார்.
அஃப்ரிடியின் மகள் இருக்கும் புகைப்படத்தில் சிங்கம் ஒன்று சங்கிலியால் கட்டப்பட்டு படுத்திருப்பது தெரிகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் கோபத்தில் கொதித்தெழுந்து, டிவிட்களை தெறிக்கவிட்டுள்ளனர்.
"சிங்கத்தை சங்கிலியால் கட்டி வைப்பது மிருகங்கள் மீதான அன்பினை காட்டும் செயல் அல்ல. தயவுசெய்து அதை அவிழ்த்து காட்டுக்குள் விடுங்கள். வனத்தில் சுதந்தரமாக அலைந்து திரியவே அவை பிறந்துள்ளன. உங்கள் சந்தோஷத்திற்காக கூண்டுக்குள் அடைபட்டு கிடப்பதற்கு அல்ல" என்று ஒருவர் பதில் டிவீட் செய்துள்ளார். அவரைப் போன்று பலர் அஃப்ரிடியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அஃப்ரிடி ஒன்று நினைக்க நெட்டிசன்கள் ஒன்று நினைத்துவிட்டனர்!.