கனடா நாட்டில் வெப்பத்தாலும் வறண்ட சூழலாலும் அனல் காற்று வீசி வருகிறது. இதனின் வெப்பம் தாள முடியாமல் இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் க்யூபெக் பகுதியில் வெப்பக்காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து க்யூபெக் சுகாதாரத் துறை, ‘அனற்காற்று காரணமாக உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் 50 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களாக இருக்கின்றனர். அனைவரும் தனியாக வாழ்ந்து வந்தவர்களாக இருந்துள்ளனர்.
மேலும், அவர்கள் யார் வீட்டிலும் குளிர்சாதன வசதி இல்லை’ என்று தெரிவித்துள்ளது. மான்ட்ரியல் பகுதியில் 12 பேரும், க்யூபெக்கின் கிழக்குப் பகுதியில் மீதம் இருப்பவர்களும் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, மான்ட்ரியல் சுகாதாரத் துறை வளாகங்கள் மற்றும் சமூகநலக் கூடங்களுக்குச் சொந்தமான 19 இடங்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
பொது மக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் க்யூபெக்கின் உள்ளூர் நிர்வாகம், அனற்காற்று தாக்கும் வகையில் இருக்கும் அக்கம் பக்கத்தினர் பற்றி தெரிந்து கொள்ளவும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.