'கஞ்சா' என்று பொதுவாக அழைக்கப்படும் 'மரிஜூவானா' செடியிலிருந்து எடுக்கப்படும் மருந்தினை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை ஜூன் 25-ம் தேதி அனுமதி வழங்கியுள்ளது. வலிப்பு நோயாளிகளுக்கு இந்த மருந்து நல்ல பலன் தருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அடிக்கடி வரும் டிராவி (Dravet) என்னும் வலிப்பு, சிறுவயதில் அதிக காய்ச்சல் மற்றும் உயர் வெப்பநிலை மாறுபாட்டால் வரும் லெனாக்ஸ் கேஸ்டாட் (Lennox-Gastaut) வலிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படும் 2 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய 'எபிடியோலெக்ஸ்' என்ற மருந்தினை கிரீன்விச் பயோசயன்சஸ் என்ற ஐரோப்பிய நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் உலகமெங்கும் பல மருந்து ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது என்று இந்த ஆய்வுகளில் பங்கேற்று வரும் குழந்தை நரம்பியல் நிபுணர் டாக்டர் ரிச்சர்ட் மோர்ஸ் கூறியுள்ளார்.
"சிறுவயதில் வரும் வலிப்பு நோய் குறித்தும், அதில் கன்னபிடியால் என்னும் இந்த மருந்தின் விளைவு குறித்தும் ஆராய்ச்சி செய்தோம். நோயுள்ள 15 முதல் 20 குழந்தைகளை ஆய்வு செய்ததில், இந்த மருந்து நல்ல பலனை தருவதை கண்டறிந்தோம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அனுமதித்துள்ள மருந்தில், கஞ்சா செடியிலிருந்து பிரிக்கப்படும் கன்னபிடியால் (cannabidiol - CBD) எனப்படும் வேதிப்பொருள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் கஞ்சா தரும் போதைக்கும் தொடர்பில்லை. போதையுடன் தொடர்புடையது டெட்ராஹைட்ரோகன்னபிடியால் (tetrahydrocannabinol - THC) என்ற பொருள்தான்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மருந்து வாய் வழியாக அருந்தக்கூடிய திரவ நிலையில் இருக்கும் என்றும் தெரிய வருகிறது.