ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணைகளை கொள்முதல் செய்தால், இந்தியா மீது கடும் பொருளாதார தடை விதிக்க சாத்தியம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
உக்ரைன், ஈரான், சிரியாவுக்கு ஆதரவு, அரசியல் தலையீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் எஸ்400 ரக ஏவுகணைகளை வாங்கியதன் காரணமாக சீனாவின் ராணுவ அமைப்பிற்கு நிதி பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது.
இதனால் கடும் கோபம் அடைந்த சீனா, “தவறை உடனடியாக சரிசெய்து கொள்ளுங்கள், எங்கள் மீதான தடையை விலக்கிக்கொள்ளுங்கள், இல்லையெனில் கடுமையான விளைகளை எதிர்க்கொள்ள நேரிடும் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, ரஷ்யாவிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியில் எஸ்௪00 ரக ஏவுகணையை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது, இது தொடர்பான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவிற்கும் பொருளாதார தடை எச்சரிக்கை எழுந்துள்ளது.
இதனால் இந்தியாவில் ஆயுதக் கொள்முதல் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், ஆசிய பிராந்தியத்தில் சீனாவிற்கு போட்டியாக வளர்ந்து வரும் இந்தியாவிடம் அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.