மியான்மர் நாட்டிலிருந்து ஏதிலி என்னும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்திருப்போரில் ஏழு பேரை திரும்ப மியான்மருக்கு அனுப்பியது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலி முகமை (UN refugee agency - UNRA) அதிருப்தி தெரிவித்துள்ளது. ஐநா சபையின் பொது செயலர் அண்டோனியா கட்டர்ஸூம் முகமையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மரின் ராக்கினே மாநிலத்தில் வன்முறை வெடித்தது.
பாகிஸ்தானில் பிறந்த அட்டவுலா அபு அமார் ஜூனானியின் ஆரகன் ரோஹிங்யா மீட்பு படை, மியான் பாதுகாப்பு நிலைகளின்மேல் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு மோதல் ஏற்பட்டது. தொடர்ந்த வன்முறையில் சிறுபான்மையினரான ரோஹிங்யாக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த கிராமங்கள் அழிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ரோஹிங்யா பிரிவினர் ஏறத்தாழ ஏழு லட்சம் பேர் உயிர் தப்ப பங்களாதேஷூக்கு ஓடிப்போயினர். அவர்கள் அங்கு முகாம்களில் தங்கியுள்ளனர்.
மனித உரிமை கண்காணிப்பு குழுவின் (Human Rights Watch -HRW) கணக்கீட்டின்படி, இந்தியாவில் ஏழு சிறுவர்கள் உள்பட 32 ரோஹிங்யாக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுள் பெரும்பாலானோர் மியான்மரின் ராக்கினே மாநிலத்திலிருந்து இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்துக்குள் வந்து 2014ம் ஆண்டு ரயில்வே காவல்துறையினரால் பிடிக்கப்பட்டவர்கள் என்று நம்பப்படுகிறது.
தற்போது மியான்மர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட ஏழு பேருமே மியான்மர் கலவரத்துக்கு முன்பே இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதாவது 2012ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் அகதிகளாக இருந்த இவர்களுடன் தொடர்பு கொள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகம் செய்த முயற்சிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று அகதிகளுக்கான தூதர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.
"ஐக்கிய நாடுகளின் தூதரகத்திலிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு உரிய பதில் கிடைக்காதது வருத்தமளிக்கிறது. எந்தச் சூழ்நிலையில் அவர்கள் மியான்மருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்ற விளக்கத்தை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகம் எதிர்பார்க்கிறது." என்று அவர் கூறியுள்ளார்.
"ரோஹிங்யாக்களை கட்டாயப்படுத்தி மியான்மருக்கு திரும்ப அனுப்புவது துன்புறுத்தலுக்கு வழிவகுக்கக்கூடும். புகலிடம் தேடி தன் எல்லைக்குள் வந்தவர்களை காப்பாற்றும் நீண்டகால இந்திய பாரம்பரியத்தை இந்திய அரசு கைவிட்டுள்ளது," என்று மனித உரிமை கண்காணிப்பு குழுவின் தென் ஆசியாவுக்கான இயக்குநர் மீனாக்ஷி கங்குலி கருத்து தெரிவித்துள்ள நிலையில் "திரும்ப மியான்மருக்கு செல்வதற்கான விருப்பம் ஏழு பேரிடமும் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்தப்பட்டது," என்று இந்திய வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகமையின் கருத்து ஐநா பொது செயலர் அண்டோனியா கட்டர்ஸ் ஆதரிப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டெபானே டுஜாரிக் கூறியுள்ளார்.
ஏழு ரோஹிங்யாக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.